cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

திங்களைச் சமைப்பவள்


வியாழனன்றே திங்களை எதிர்நோக்கும்
ஒருத்தி இருக்கிறாள்.
அவளின் எல்லா நாட்களும்
திங்களில் தொடங்கி,
திங்களை நோக்கி,
திங்களிலேயே சேர்கிறது.

வெள்ளியின் விடியலில்
கிழக்கு கடற்கரையில்
மழையேந்த நிற்பவளை
வாரி அணைத்து
செந்தழலாய் பொழிவான்
பரிதி!

திங்கள் என்ன உடுத்துவது என்பது
சனியில் தீர்த்தே ஆகவேண்டிய கேள்வி.
முதல் சந்திப்பு
முதல் முத்தம்
முதல் காப்பி
முதல் ஏற்பு
முதல் தொலைதல் எல்லாவற்றிலும்
உடுத்தியிருந்த வண்ணங்கள்
நினைவுகளில் சிவக்க,
உடுத்தாத நிறம் தேடிக்
கலைத்து களைத்து களித்தபின்
நிம்மதியாய்
ஞாயிறுக்குள் உறங்கப் போவாள்.

விழித்ததும்
சனியில் கலைத்துப்போட்ட நொடிகளை
ஒன்றின்மீது ஒன்றாக
பக்குவமாக அடுக்கி
அதன் உச்சியில்
திங்களை மலரச் செய்வாள்.

ஓரிரு செய்திகள்
ஒரு சந்திப்பு
சிறு அணைப்பு
சில முத்தங்கள்
துயர்கூட்டும் பிரிதல்
நிறைய மௌனம்
மீண்டும் அடுத்த திங்கள்வரை
அவளை உயிர்த்திருக்கச் செய்யும்.

பூக்காத சொற்களை தொடுத்து
நடக்காத உரையாடலை நிகழ்த்த
ஒரு மாலை கோர்ப்பாள்
ஒவ்வொரு செவ்வாயும்.
மாலை காயும்முன்
தோள் சேர்க்க
அத்தனை பிரயத்தனமும் கொள்வாள்
புதனிடம்.

அவளின் நூற்றாண்டின் தவிப்பை
வியாழனில் சூடிக்கொண்டவன்
புன்னகையுடன் ஓலை அனுப்புகிறான்..
“ஹேய்.. செம்மயா இருக்கு”

பூக்க காத்திருக்கும் சொற்கள்,
தொடுக்கும்போது உதிர்ந்தவை,
அவன் சூடித் திரும்பிய மாலைகளில்
மெத்தை சமைத்து
தூங்க அழைக்கிறான் வியாழன்

திங்களில்
ஞாயிறை காணும்வரை தாங்காது
வெள்ளியில் அவன் வாசல்
சென்று திரும்பும் கனவில்
வாரம், ஒரு இரவு தூங்கிக்கொள்ளும் அவள்
திங்கட்கிழமைக்காக காத்திருப்பவள்.


Art Courtesy : Aisha Haider

 கவிதையும் குரலும் : வித்யா.மு

About the author

வித்யா.மு

வித்யா.மு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website