1. செவ்வொளி
சாலையின் செங்கம்ப எச்சரிக்கைகளை அகற்றி விட்டார்கள்
குண்டுச்சிமிழ்களைச் சுற்றிய இரைச்சல் நீண்டநாளாய் அடங்கியிருந்தது
ஒளி செய்யும் எல்லா வர்ணங்களையும்
இருள் விழுங்கியிருந்தது
நிழல் சமைத்த
கருரேகை மிருகங்களும்
சுவரோடே மறைந்து போயின
வீடுகள் தோறும்…
புத்தகராக்கைகளில்
சமையற்கட்டு போத்தல்களில்
படுக்கை விரிப்புகளில்
சப்பாத்து அடைசல்களில்
முழுதுமாய்
இருளின் பீதி
இருள்
வீடுகளை அணைத்து
செவ்விளக்கொளிகளை ஏற்றியது
2.
மாமிசப்பட்சிகள்
வெற்றுச்சதை உறிஞ்சி
பாலையில் புதைக்கும்
பசிய நரம்பு மச்சை
கட்டுப்படா மூர்க்க வார்த்தையில் வழுக்கிவிழும்
வாழ்வின் அத்தனைப் பாடுகளும் உடலோடு போய்
உடலைச்சேரும்
நம்மைப் பிரிந்துபோகும் உயிர்
ஊன் விழுதேறி
மீண்டும் மீண்டும்
கொப்புகளில் தங்கும்
நிழலில் ஊறிய இரத்தம்
புளுத்து நெழியும் துடிப்பில்
கானல் வெளுக்கும்
கூதிர் பிறக்கும்.
3.
மாயும் நெஞ்சிடை
சொல்லிய சொல்லில்
அறுந்துவிழும் எல்லாப் பற்றுதல்களிலும்
திரும்பத்திரும்ப ஒன்றையே எழுதிவைத்தேன்
வசதியாக எண்ணிமுடித்த
காலக்கணிப்பில்
இறுதிக்கதறலில்
கருணையற்றுப்போன அறம்
எக்களிக்கும் முகத்தோடு
நெஞ்சை உதைத்தது
கூடு சிதைந்தது.
Art Coutesy : Lu Kuchiki