cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

இருத்தலும் இல்லாமல் போவதும்


ஹாலிவுட் கனவுப் புகலிடமான லாஸ் ஏஞ்சலஸில்
ரோடியோ ட்ரைவ் வளைவுப்பாதை ஓரத்தில்
அமர்ந்திருந்த அவனது உடல் முழுக்க
செந்நிற அழுக்குப் படர்ந்திருக்கிறது.

அவனது அழுக்குச் சட்டை
இன்னதென நிறம் பிரிக்க இயலவில்லை.
பழுப்பு நிற கால்சட்டை இடது பக்கம்
பாதி கிழிந்து கவிழ்ந்திருந்தது
செம்பழுப்பு தலைமயிர் சடைப்பிடித்திருந்தது

அவனருகில் முகம் சுளிக்கும் வகையில்
மூத்திர நாற்றம்.
ஏதோ பேசியபடியே வாய்
கோணித்து சிரித்தது.
கஞ்சா கறை படிந்த பற்கள்.
அவ்வப்போது குப்பைத் தொட்டியில்
உமிழ்ந்து கொண்டிருந்தான்
அதுமட்டிலுமாவது அவனுக்கு தெரிந்தருக்கிறது
இப்போது காத்திரமான
கஞ்சா மூத்திர நெடி கலந்த
காற்று அலைபாய்ந்து கொண்டிருந்தது

குப்பைகளை களைந்து உணவைத் தேடினான்
மீண்டும் சாலையில் செல்பவர்களிடம்
இரு கை நீட்டி பிரசங்கம் செய்தான். நடுநடுவே 
சிரித்துக் கொண்டான்

அவனது வலது கால் ஆட்டம் கண்டது
திடீரென சப்தமிட்டு பாடத் தொடங்கினான்.
வழிப்போக்கர்களின் தலைகள்
அவன்திசை திரும்பி மீண்டும்
நேர்படுத்திக்கொண்டன
அவன் மெல்லிய உடல் லேசாக ஆடியது.
பாடலை நிறுத்திவிட்டு
வானம் பார்த்து சிரித்து 
மல்லாந்து படுத்துவிட்டான்
கண்ணீர் வழிந்த கண்களை மூடிக்கொண்டான்
போதையின் உச்சத்தில் உடல் திடுக்கிட்டு போட்டபடியிருந்தது
வாய் ஓயாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது

எதிர் சுவரில் வண்ண ஓவியங்களாய்
மிளிர்ந்து கொண்டிருந்த
லாரன்ஸ் ஓலிவரும் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்டும்
இன்னும் பிற ஹாலிவுட் ஜாம்பாவான்களும்
அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
Courtesy – Painting : Paul Orsi

About the author

ஹேமி கிருஷ்

ஹேமி கிருஷ்

You cannot copy content of this Website