cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

ப.தாணப்பன் கவிதைகள்


ஓட்டம் மறந்த சிற்றோடை

தொலைதூர
புள்ளினங்காள்
செவ்வானம் பெயர்த்து வருகின்றன.
இச்சை பூண்டு
பட்ட மரங்கள்
இட்டுக் கொண்டன
பச்சைய முத்தங்கள்.
நாணிக் கொண்டே
தூயிலெழுந்தது
பிறை நிலவு.
பெய்யக் காத்திருக்கிறது
கருமேகச் சூல்.
மறைவிலிருந்த
ஒற்றை விண்மீன்
சிந்திய ஒளிர்வில்
தெறித்து விழுகிறது
மழையின் முதற்துளி.
வாங்கிக் கொள்ள
நின்று கொண்டிருக்கிறது
இப்போது
ஓட்டம் மறந்த சிற்றோடை.

பட்டம்பூச்சி வரைகிறாள்

வண்ணங்களால்
பிரிதி எடுத்து
பட்டாம் பூச்சி
பறக்கிறதென்றாள்
படபடத்த விழிகளோடு
பள்ளி செல்லும்
மூன்று வயது மகள்.
பத்திரப்படுத்திய
பட்டாம் பூச்சியினை
மீண்டும் பறக்க விட்டு
காண்பிக்கிறேன்.
நம்ப மறுத்தவள்
மீண்டும்
வரைகலையில் மூழ்கிப் போகிறாள்.
போனால் போகிறதென்று
வண்ணக்கலவையினை
பட்டாம்பூச்சியாய்
நானும் பார்க்கிறேன்.
வேறொருநாள் பட்டாம்பூச்சிதனை
உணரும் வரை..

சிரிக்கிறது தூரிகை

அந்திமச்சூரியனின்
மென்னிழை வெம்மை.
துறந்த மரமொன்று
வீசிடும் துளிர் தென்றல்.
மீட்சியுற்ற சிற்றோடையின்
சலசலப்பு.
துயிலா மச்சங்களின்
தூண்டுகை வனப்பு.
கருங்குயில்களின்
குலவைச் சத்தம்.
நடைபயின்று போகும்
இளமுதுமை.
நின்று விந்தையுற்றன
ஓடாமேகங்கள்..
செயற்கை கண்களின்
துடிப்பொளியினில்
தூரிகை சிரித்தது.

உயிர்த்துறப்பல்ல

ஆட்டும் வாலும்
ஆடாத ஊஞ்சலும்
நேர்கோட்டுப் புள்ளியில்.
மௌனத் தேற்றலில்
துவளாத கண்களின்
பரிமொழி கடத்துகின்றன
பூத்திருக்கும்
புற்பூக்களில்
நுனிக் கோளங்கள்.
துஞ்சா வாசம்
அஞ்ஞான மெய்யாகி
அன்பின் ஒத்திகைக்குள்
அடைக்கலமானது.
உயிர்த் துறப்பல்ல
உணர்வும் உள்ளமும்..

ஆதித்துளி

நீர் மேடையின்
பசுமை விரிப்பில்
இதழ் விரிக்கிறது
ஓர்மைப் பூ.
வந்தமர்ந்த
தட்டானின்
சிறகசைப்பில்
மகரந்த வாசம்.
சிலிர்க்கும்
வளையினில்
நீர்ச்சத்தம்.
ஒட்டிக் கொள்ள
வேண்டுகிறது
ஆதித் துளி.

பூ முகம்

நடைபாதையோரம்
பசிக்கென
விற்கும்
மகளிடம் பெற்ற
இரவல் புன்னகையை
நிரப்பிக் கொண்டு
போகிறேன்.
பார்க்கும் போதெல்லாம்
அவளின் முகம்
பூக்களென.


 

About the author

ப.தாணப்பன்

ப.தாணப்பன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website