தானுரித்த சட்டை தானுண்ணும் அரவத்தின் இயல்பு
உருகிப் பற்றிய கரங்களை உதறிப் போகிற உன் பிரியம்
ஈன்ற குட்டிகளில் சவலைக்கு உயிர் விடுதலையளிக்கிற பூனையின் தாய்மை
மிகு கருணையுடன் உன் துரோகம் மறத்தல்
நகங்கள் மழுங்கிய கழுகின் பார்வையிற் சிக்கும் முள்ளம் பன்றியின் பசி
விடுதிப் பெண்களின் உள்ளாடைகள் பத்திரப்படுத்துகிற கிழவனின் கண்கள்.
பலி பீடத்துத் துருவேறிய கத்திக்கு வாகாய்த் தலை வைத்தல்
முத்தமிட்ட உதடுகளைப் பிரிவின் போது சுமந்து அலைதல்.
சுற்றுலாச் சென்றவரின் வளர்ப்பு நாயென வாசலில்
எட்டும் தூரத்தில் வைக்கப்படும் உணவும் நீருமாய் வாழ்க்கை
காலிறுக்கும் சங்கிலியாய்
உன் நினைவு காலம் முழுதும்.