cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 1 கவிதைகள்

மயிலாக்கம்


நீலத்தின் பச்சையும்

பச்சையின் நீலமும்

கருமைக்குள் கிளர்ந்து

கண்ணென விரிந்து

ஒயிலாய் பாதத்தில் மடிந்து

கொண்டையும் சிலிர்த்து

அலகின் வெளிறலில்

சத்தியும் உறைந்து

ஓங்காரத்தின் வளைவில்

துதிக்கும் அகத்தினது

ஆடும் ஓர் கோலம்.

 

சிறகும் பெருகி

தோகையின் சிறுகீற்றாய்

ஆங்காரச் செருக்கும்

ஆழியின் அலைவும்

திகழ்பரச் சந்தத்தில்

சித்தம் தணலாடி

காக்கும் தயையின்

அருமருங்கு அகன்ற

ஆணவச் சுழலில்

கதித்து கன்னல் என

பறக்கும் பொறி.

 

பீலியின் நிழலாம்

குன்றத்தின் திருவில்

எழில்புரத்துச் சிறப்பில்

பிணியும் பேயும் பிறவும்

எட்டா பிறப்பில்

ஒலியின் வழி பெருகி

லிபியின் கண் அமர்ந்து

வரைவும் நிறைவுமாய்

கொண்ட கோலத்து

கூடும் கோசரம்

வழிந்த ரூபம்.

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Rathnavel Natarajan

அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் முபீன் சாதிகா

You cannot copy content of this Website