cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 1 கவிதைகள்

சிறிது இருள்


ஒன்று: சர்ச்சை

 

‘திடும்’ ‘திடும்’ என 

இதயத் துடிப்புகளை அதிகரிக்கும்

புறாக்களின் அனத்தல் உரையாடல்

‘டொக்’ ‘டொக்’ என

மனம் பிளக்கும் மழையின் தற்கொலைக் கூச்சல்

மேல் வீட்டுப் பலகணியின் எல்லை மீறிய பிளாஸ்டிக் கூரை மேல் நிதானமாக 

கவிழ்ந்த கண் கூசும்

விழித்த கனவிற்குள் ஊடுருவும்

அண்டை வீட்டு ஜன்னல் வெளிச்சம்

மர்மபோகியைக்

கைது செய்யும் இருள் கிருமி

தன் கருப்புப் பக்கத்தில் வரைந்து செல்லும் முன்வினைப் பயன்

எழவும் முடியாமல்

விழவும் முடியாமல்

இல்லாத ரகசியத்தின் கூக்குரல்

கீழ்வாதத்தின் கோபத்தில்

மூர்ச்சையாகிறது

இரவு

தன் ஆசையின் கல்லின் மீது

இவனைத் திருப்பிப் போட்டபடியே

தின்னவும் இல்லை தீய்க்கவும் இல்லை

வேகவும் இல்லை சாகவும் இல்லை

அப்படி ஒரு சாபம்

அப்படி ஒரு சல்லாபம்


இரண்டு: மூர்ச்சை

 

படைப்பின் தேவைக்குக் கசிந்த முதல் சொல்லின் அர்த்தங்கள்

எதிர்-கவிதைகள் எழுப்பும் உணர்வுகளின் பிழைகளாகின்றன

நீ கூடக் கூட

உன் நிழலும் கூடுகிறது

நீ பாடப் பாட

உன் எதிரொலியும் சேர்ந்து கொள்கிறது

நீ மூச்சு விடும் காற்றில்

என் ஸ்வாசத்தையும் அணைத்துக் கொள்கிறாய்

நீ துப்பிய எச்சிலில் கலந்திருக்கும் என் சுவை

இப்போதும் ஓடுகிறது இந்தச் சாலையின் வெள்ளச் சாக்கடையில்

நீ தொட்டது தொட்டாச் சிணுங்கியின்

நிகழ்கால சாபத்தை


மூன்று: உஷாஷின்* இரவு

 

அறையின்

தரையில் சுவரில் கூரையில்

படுக்கிறாள் அமர்கிறாள் நிற்கிறாள் நடக்கிறாள்

ஓடுகிறாள் உருள்கிறாள் புரள்கிறாள் ஊர்கிறாள்

கண்களை மூடினால் எல்லாம் தெரிகிறது

திறந்தால் எதுவும் தெரியவில்லை

ஒவ்வொரு சதுர அடிக்கும்

ஒரு பிரகாசக் கனவை விதைத்து

அறுவடைக்குக் காத்திருக்கிறாள்

இரவின் பரிசுப் பெட்டிக்குள்

இருப்பதென்னவோ ஒரு சிறை தான்

யாமத்தின் திரையைத்

தொட்டுத் தடவி நகர்த்துகிறாள்

நகர்த்த நகர்த்த

அது நீண்டு கொண்டே போகிறது

அடுத்த முறை இரவிற்குள் நுழையுமுன்

துணைக்கு ராத்திரியை**

அழைத்துக் கொள்ள வேண்டும்

என நினைக்கும் பொழுதே

அடுத்த அசுர இரவும் வந்துவிடுகிறது

 

உஷாஷ்*இந்து வேதங்களில் (ரிக் வேதம்) கூறப் பெறும் விடியலின் பெண் கடவுள்.

ராத்திரி** – இந்து வேதங்களில் (ரிக் வேதம், அதர்வ வேதம் மற்றும் தாந்த்ரீக சூத்திரம்) கூறப் பெறும் இரவின் பெண் கடவுள். உஷாஷின் சகோதரி.


நான்கு: உறக்கம் கெட்டவர் உளறிக் கொட்டியது

 

இரவைச் சுழற்றும் காற்றாலைகள் தயாரிக்கும் கனவுகளில்

தூக்கத்தின் நிலத்தில் காணி நிலம் வேண்டி

கத்துங் குயிலோசை சற்றும் வந்துத் தன் காதிற் படவேணாம்

பாரடங்கும் நேரம் தனக்கும் தினம் ஒரு பாதாளத் தூக்கம் வேண்டும் என

சிலந்திக் கவிஞர் ஒருவர் தன் க(வ)லை-வலை நூலினைக் கக்க முடியாமல்

சிக்குண்ட கிடப்பது என்னவோ கனவை ஊடுருவிய

இரவுகளால் நெய்யப்பட்ட மற்றொரு கவிஞரின் மாயவலையில்

இரை கிடைப்பது குறைவு

இரையாவதற்கு எந்தக் குறையுமில்லை

பக்கவாட்டு உலகில் இயங்கும் அவர்கள்

இப்போது மிகப் புதிதாகப் பிறக்கிறார்கள்

இதற்கும் மேல் மௌனம் ஒன்று தான்

அவர்கள் உரையாடல்களின் பாடத்திட்டம்

சொர்கத்திற்கு மிக அருகில் வந்து

தங்கள் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள்

கடவுள் வந்து நம்மை தரிசிக்கட்டும் என்று

காத்திருப்பின் பனிக்குடம்

அகாலத்தில் வெடித்து

சமகாலத்தில் விடிகிறது

காஃபி சாப்பிடலாம் எனச் சமயலறைக்குப் போனால்

அது ஆய்வுக்கூடம் போல மாறிவிட்டிருக்கிறது

பாலும் இல்லை தூளும் இல்லை

குளிர்சாதனப் பெட்டியில் பியர் இருக்கும் என

அதைத் திறந்தால்

இருவர் கனவின் சிலந்தி வலைகளும் அங்கே

பின்னிப் பிணைந்து பழங்காலத்து

வெள்ளை ஒயின் போல மாறி

மிகப் புதிதாக முலைகள் தருகின்றன

அந்த முலைகள் சிலைகளாக இருந்தது குறித்து

அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.


 

About the author

நந்தாகுமாரன்

நந்தாகுமாரன்

பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறையில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Kaniamudhu Amuthamozhi

நந்தகுமாரன் கவிதைகளின் மொழி வழக்கத்திற்கு மாறான வேறு பரிமாணத்தில் பரிமளித்துள்ளது. வாழ்த்துக்கள் நந்தா ❤️
வாழ்த்துக்கள் சந்தோஷ். மீதிக் கவிதைகளையும் வாசித்து விட்டு வருகிறேன்.

You cannot copy content of this Website