- அவதாரம்
ஓய்ந்த நள்ளிரவில்
கோட்டான்களின் அலறல்களைத்
தூக்கிக்கொண்டு
சாலைகளைப் புறந்தள்ளி
காடுகளைக் கையில் எடுக்கிறேன்..
காடுகளின் வேர்களை
உண்ணும் எனக்கு
இலைகளுக்குள்ளான
உறக்கம் கொஞ்சம் பிடித்திருந்தது..
பறவைகளின் முத்தத்தில்
இலயித்துப்போகிறேன்..
பூக்களின் மகரந்தத்தை
அள்ளியெடுத்து அரிதாரம்
பூசிக்கொள்கிறேன்..
உயிரின் சுவாசக்காற்றை
உருவி எடுத்து
மலையிடம் மண்டியிடுகிறேன்..
நான் மரத்தின் அவதாரம்..
- காப்பியின் நிறம் சிவப்பு
அது ஒரு மலைக்காடு
தேயிலைத் தோட்டத்தின்
இடையிடையே தலைநீட்டும்
காப்பிச்செடிகள்…
கரும்பாறையில்
காலை நீட்டியபடி
காப்பிச் செடியின் சிவந்த பழங்களின்
சாற்றை ருசிக்கிறேன்..
விதைகளின் வளவளப்பை
முகஞ்சுருக்கி தூர எறிகிறேன்..
கோபக்கனலைத் தெளிக்கிறான்
கவுண்டர் மகன் பொன்னுசாமி…
- பாறைகளின் காதலன் நான்
வட்டமாக கருமையாக இருக்கும்
பாறைகளைத் தேடி அமர்வதில்
ஓர் ஆனந்தம் எனக்கு..
ஆதிக்குடியின் கதைகளை அளவளவாகப்
அதனோடு பகிர்கிறேன்..
என்னில் படர்ந்த சூரியனை
பாறைகளின் மேல் தெளித்து
நகர்கிறேன்..
பற்றி எரிகிறது பாறை..
நிலவைப்பிடித்து
அதன் கையில் திணித்து
திரும்பும் என்னோடு
மெதுவாய் சினேகம் கொள்கிறது..
பிரிய மறுக்கிறது..
அந்தியில் அதனுள்
அழகாய் பூக்கிறது காதல்..
பாறையின் பாதத்தில்
நான் எழுதி வைத்த
வரிகளை எல்லாம்
ஒவ்வொரு இரவிலும்
கொத்தித் தின்கிறது
வலசை போகும்
எந்தன் மனப்பறவை..