-
உயிர்ப்பில்லா எமோஜிகள்
லைக்கும் ஹார்ட்டினும்
எப்போதும் உண்மையைப் பேசுவதில்லை
போட்ட எமோஜிகளைவிட
போடாதவர்களின் விரல்களே
மனத்திற்குள் வலம் வருகின்றன
யாருக்கோ இடப்பெறும் ஒன்றை
தனக்கெனதாகவே மறுகும்
உள்ளங்களும் உண்டு
கேர் எமோஜி தரும் உணர்வு
மெய்த் தீண்டுவதே இல்லை
விழித்துளிர்க்கும் துளிகளும்
விரல்கள் திரையை
நகர்த்த நகர்த்தக்
காய்ந்து விடுகின்றன
ஏதோ ஒன்றைக் கடத்த முனையும்
அழுத்தப்பட்ட எமோஜிகள்
அழுத்தபடாத எமோஜியிடம்
தோற்றுதான் போகின்றன.
- கனங்களில் பூக்கும் நீராம்பல்
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியிலும் உயிர்த்தெழும்
விரல்களின் துடிப்பும்
சொற்களின் தவிப்பும்
சிற்பி வடிக்கும அழகிய
சிற்பம் போன்றதே
சற்றே பிசகினால்
உறவு மூளியாகிவிடும்
சற்றே விரைந்து வா
காத்திருப்பின் கணங்கள் நீளும்போதெல்லாம்
மனத்தின் கனங்கள்
நீராம்பலைப் பூக்கச் செய்கின்றன
நரகத்தின் வாயிலில்
சொர்க்கம் உண்டென
எண்ணுவது அறியாமைதானே
காத்திருந்தது போதும்
சற்றே விரைந்து வா
காத்திருப்பு உனக்கும்தானே
இனியும் தாமதிக்காதே
மனக்கதவைத் திற
காற்றிற்காகவா என நகைக்காதே
மூடிய கதவின் மற்றொருபுறம்
நிற்பது நீயென்று அறியாமல்
தட்டும் விரல்கள்
மடங்குவதற்குள் திறந்திடும்
பூட்டின் நாளங்களே
சற்றே விரைந்து வா!
அருமை!! தொடர்ந்து பதிவேற்றம் செய்யவும்!! 😀👍🏼