- மல்லியப்பூ சேலை
மூன்று நாட்கள் கெடுவைத்து
காத்திருக்கச் சொல்கிறது காதல்.
மூன்னூறு ஆண்டுகளாக காத்திருக்கிறேன்
என உள்ளிருந்து நினைவூட்டுகிறாள்
யட்சி.
யட்சியை ஜீவிக்கும் தேவகுமாரன்
இவனாக இருக்க வேண்டும்
என வேண்டி
அகல்விளக்கு ஏற்றுகிறாள்
மல்லிகைச்சரம்
சூடிய(அ)வள்.
காத்திருக்கும் மூன்று நாட்களை
காதலோடு கடக்க
ஒரு நூறு ரசனை வைத்திருக்கிறாள்
யட்சி.
மல்லியப்பூ சேலையை
மார்போடு உடுத்தும்போது
மூன்றாம் நாள் எங்கே தன்னை
மறந்தே போய்விடுவானோ
என நினைந்து அஞ்சுகிறாள்
மல்லிகைச்சரத்துக்காரி.
எட்டுத்திசையும் கிழக்கென
திரியும்
அவனது சூரியன்
தன் உள்ளங்கைகளுக்குள்
கிடப்பதை நினைத்து
பெருமையில் பொங்குகிறாள்
யட்சி.
ஓடிச்சென்று
அவன் உடல்வாசனையை
பத்திரப்படுத்திய
மெத்தை விரிப்பை நுகர்ந்து
அதில் சப்போர்ட்டா மணம்
இன்னும் இருப்பதை உறுதிசெய்கிறாள்
‘அவள்’.
யாரை கூடினாலும்
உடல் ஒட்டும் மணம்,
ஆனால்
உள்ளே ஓடுவது எனது மனமல்லவா
என பூரிக்கிறாள்
யட்சி.
மூன்று நாட்களை பின்நகர்த்த
யானை பலம் வேண்டும் என
பொருமிக் கொண்டே
ஏற்றிய விளக்கின்மீது
மல்லிகைச்சரத்தை தூக்கி வீசுகிறாள்
‘அவள்’.
வீசிய பூவை அள்ளி முடிந்து
அவன் தந்த மல்லியப்பூ
சேலையை உடுத்தி
காதலில்
காமத்தில்
கனவில்
களித்துக் கிடக்கிறாள்
யட்சி.
பெரிதாக ஒன்றும் வேண்டா தனது
சின்னஞ்சிறு மனதுக்கு,
இடக்கையில் அணைத்து
வலக்கையில் தாடையை
ஏந்தி இடும் முத்தம் போதும்
என ஏங்கித் தவிக்கும்
‘அவளை’ திரட்டி,
ஒளிரும் சுடராய்
நான்காம் நாள் விடியலில்
அவன் கைகளில் சேர்த்துவிட்டால்
போதும்..
மீதக்கதையின் நாயகன் அவன்
என இரண்டாம் நாளின்
மூன்றாம் ஜாமத்தில்
புன்சிரிப்புடன் காத்திருக்கிறாள்
யட்சி.
இந்தக் கவிதையை ஒலி வடிவில் கேட்க :
- மாதவியின் அட்சயப்பாத்திரம்
நேற்றைய இரவுக்கு
காதல் அருளியது என்னவோ
ஒன்பதே நிமிடங்கள்..
அதற்குள்ளாக பகிர்ந்து கொள்ள
காத்திருக்கிறது
ஒரு சண்டை
ஒரு சமாதானம்
ஒரு தோல்வி
ஒரு அவமானம்
ஒரு பாடல்
ஒரு புகைப்படம்
ஒரு கவிதை
ஓரிரு புலம்பல்
இதழ்களை கொய்துசெல்ல
தயாராய் ஒரு முத்தம்
பத்துநாள் பரிதவிப்பு
காற்றுப்புகா அணைப்பு
நிறைய சிரிப்பு
சிறிது ஆறுதல்
சிறிது நிம்மதி
உளம் நனைக்கும் மழை..
போக,
சொல்லியும் சொல்லாமலும் விட்ட
காதல்
வெட்கம்
தேடல்!
அன்பின் மாதவி
மகளின் அட்சயப் பாத்திரத்தில்
இருந்து
சிறிது காதல் கணங்களை
தானமிடேன்.. ப்ளீஸ்!
இந்தக் கவிதையை ஒலி வடிவில் கேட்க :
- தனிமைக்காலத் துயர்
உதிக்கும் செஞ்சூரியனின்
இளம்வெப்பம்
முதுகுத்தண்டை வருடும்
பருவக்காற்றின் ஈரம்
மழை ஏந்திக் கூத்தாடும்
பச்சைத் தளிர்கள்
வாழ்வில் வண்ணங்கள்
கொணர்ந்த கருப்பு
மூதாதை புழங்கிய வீட்டு
மரக்கதவின் தாழ்
குழந்தைகளின் சிரிப்பில்
ஒளிரும் கண்கள்
உப்பங்கழியில் மிதக்கும்
நீலத் தோணி
கடலோடித் திரும்பும் மீனவர்களின்
கனத்த வலைகள்
சைக்கிள் மிதிக்கும்
காயலோர சாலை புறாக்கள்
நீ முத்தத்தை தொடங்கிய
என் மூக்கு..
அன்பே,
காண்பதும், உணர்வதும்
நீயாகவே இருந்தால்
எங்கனம் நான் பிழைத்திருப்பேன்
நாம் கூடாத
இத்தனிமைக்காலத் துயரில்..
இந்தக் கவிதையை ஒலி வடிவில் கேட்க :