புத்தகக்காட்சி கூடத்தில்
அறை மூன்றில்
ஆறாவது அடுக்கு தொகுதியில்
வலது புறம் காட்சிப்படுத்தப்பட்ட
எனது நூலின் வாசிப்பை
காற்று வாசித்துக்கொண்டிருக்கக் காண்கிறேன்.
இதழ் விரித்து முத்தமிடும்
எழுத்துக்களில்
மூழ்கிய காற்றின் நிலை அறிந்து
ஒன்பதாம் பக்கத்தின் முற்றுப்புள்ளியை
யாரோ அழுத்தமாய் ஊன்றி விடுவதான
வருகையின் தடங்கள்
காற்றையும் சஞ்சலப்படுத்தியிருக்க வேண்டும்.
முத்தத்தின் ஈரத்தைத் துடைத்துக்கொள்ளும் குழந்தை மனமாய்
இப்போது காய்ந்து வெளியாகும்
காற்றும்
இதழ் மூடும் எழுத்துகளும்
அவளை அல்லது அவனைச்
சந்தித்துக் கொள்ளும்
காலத்தைத் தள்ளி வைப்பது யாருக்கான இழப்பு
கொஞ்சம் பொறுக்க,
அந்த காலடி சத்தம் அருகில் வருகிறது
மெதுவாக
நெருங்கி வருகிறது
என்னை தூரத்திலிருத்தி
உங்களிடம் இப்போது…
அது யார் என
பார்த்துச் சொல்லுங்கள்.