1
அருகில் படுத்திருக்கும் தாயை
இறுக்கிக் கட்டிக்கொண்டு அசந்து
உறங்கிக் கொண்டிருக்கிறது குழந்தை
நீளமான இரவில்
தாயின் நெற்றியிலிருந்த
பிறை வடிவ ஸ்டிக்கர் பொட்டு
குழந்தையின் இடது கன்னத்திற்கு
இடம் மாறியிருக்கிறது
இப்படியாகக்
குழந்தையின் கன்னம் வானமாகவும்
ஸ்டிக்கர் பொட்டு நிலவாகவும்
மாறும் நேரத்தில்
உறக்கத்தினூடே
மெல்ல உதிர்கிறது
குட்டி வானத்தின்
மின்னல் சிரிப்பு ..!
2
எஸ்தர் டீச்சர் கண்டிப்பாக
இன்று பள்ளிக்கூடத்திற்கு
வரக்கூடாதென்பது தான்
குளத்துக்கரை அய்யனாரிடம்
என் தினசரி வேண்டுதல்
அந்த வேண்டுதலை
பள்ளிக்கூடம் முடியும்வரை
ஒரு முறை கூட
நிறைவேற்றாத அய்யனார்
எஸ்தர் டீச்சரிடம்
அடி வாங்கும்
நாட்களிலெல்லாம்
ஆட்டுக்கிடா மீசையோடு
கனவில் வந்து
கூனிக்குறுகி
மன்னிப்பு கேட்டதை
பல வருடங்களுக்குப் பிறகு
சந்தித்த டீச்சரிடம்
வெட்கத்துடன்
பகிர்ந்து கொண்டிருக்கையில்
பள்ளிக்கூட சீருடையணிந்து
ஓடிக்கொண்டிருக்கிறார்
அய்யனார்…
3
மருத்துவமனையில்
டோக்கன் வாங்கிவிட்டு
என் முறைக்காக
காத்திருக்கையில்
வெள்ளுடையணிந்த செவிலிகள்
அங்குமிங்குமாக
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்
இருபதைத் தாண்டாத அவர்களுக்கு
எப்போதும் மாறாத புன்னகை
மிக பாந்தமாகப் பொருந்திப் போகிறது
அப்பா அம்மா அண்ணா அக்கா என
மிக மிக இயல்பாக
நோயாளிகளை அழைக்கும் பாங்கு
பேரழகாக வாய்த்திருக்கிறது
ஊசி போடுவதை
ஓவியம் வரைவதைப் போலவும்
கட்டுப்போடுவதைக்
கவிதை எழுதுவதைப் போன்றும்
எளிதாகச் செய்ய முடிகிறது
இனியேனும் யாரும்
அவர்களை செவிலியர்கள்
என்றழைக்காதீர்கள்
நோய்மை தேசத்தின்
இரட்சகிகள் அவர்கள் ..!
Ur unique way Of approaching simple day to day activities is commendable. Congratulations