cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

கார்குழலி கவிதைகள்


  • போர்

 

உலோகப் பறவைகளின்

உக்கிர அணிவகுப்பு,

வரிசை மாறாமல்

வானில் சீறிப் பாயும் வேதனை.

தொலைக்காட்சி திரையில் தெரிவதோ

ஓசையின்றி பறக்கும் தும்பிக் கூட்டம்.

தொப்பென அவை உமிழும் விதைகள் வீரியமிக்கவை,

நிலத்தை பிளந்து உள்ளே புதைந்திருக்கும்

நெருப்புக் கோளங்களை

வெளியே இழுத்து வந்து வீசுகின்றன.

என் நெஞ்சம் வெடித்துச் சிதறுகிறது,

உடல் பதறுகிறது.

திரையில் எழும் ஆரஞ்சு பந்து

விண்ணை தொடுகிறது.

கக்கும் கரும்புகை

என் கண்ணை மறைக்கிறது,

மூச்சு முட்டுகிறது.

அஞ்சி நடுங்கி

அங்கிங்கென ஓடும்

மக்களின் கண்ணீர்

திரையில் வழிகிறது.

என் காலருகே தேங்கும்

செந்நீர் குட்டை

மீள முடியாத ஆழம்கொண்ட

பெருங்கடலாகப் பெருகி

என்னை விழுங்குகிறது.

 

  • எல்லைகளற்ற மௌனப் பெருவெளி

 

துவக்கமும் முடிவுமின்றிக்

காற்று அளாவும்

நடுக்கடலின் பரப்பாகப்

புரளும் காலம்.

நத்தையாக ஊரும் இரவு

விடியலின் வெளிச்சப் போர்வைக்குள்

புகுந்து கொள்கிறது.

வீடடைந்து இருட்டுக்குப் பழகிய

பூனையின் கண்கள்

வெயிலில் சுருங்குகின்றன.

கிழமைகளுக்கு இடையே

துல்லியமான கோடுகள் இல்லாததால்

ஒன்றையொன்று தின்று

வாரங்களையும் விழுங்கி

ஏப்பம் விடுகின்றன.

திட்டமிட்ட சந்திப்புக்கான நினைவூட்டல்

காற்றோடு கரைந்து போகிறது.

வீடடைந்த காலத்தில்

எல்லைக் கற்கள் இல்லாத

மௌனப் பெருவெளியே

வாழ்வாக மாறி விடுகிறது.


 

About the author

கார்குழலி

கார்குழலி

You cannot copy content of this Website