cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்


ஒரு பறவையென மாற்றிடு

1

எத்தனையோ ஜென்மங்களென
விடாது தொடரும்
காரணம் ஏதுமற்ற பிரார்த்தனையைக்
கூட்டி வைக்கிறேன்

இழந்த சிறகுகளை
எண்ணுவதில் பலனில்லை
அறிவேன்
உதிரப் போவதெனப்
போக்கு காட்டுகிறவையும்
பயனில்லை
அதையும் அறிவேன்

வீழ வீழ முளைக்கும்
வாதைகள் சில
மேலெழும்புவதை
தடை செய்யவென
இனி நம்புவதற்கில்லை

உந்திப் பறப்பது
எனதானது
தத்தளித்து உயர்வது
எளிதுதான்

கூண்டைப் பரிசென
அளிக்கிற
முகங்களைப் பார்க்க வேண்டாம்
அந்தக் கரங்களை
கூடுமான வரையில்
தரிசிக்க வேண்டாம்

இலக்கென்ற ஒன்றை
வரையறுத்தால்
வட்டத்திற்குள்
சுழலும்படி ஆகலாம்

திரும்பிடத் தேவையொரு
கூடென்னும் எண்ணமற்ற
எல்லையற்ற வெளி
எனதாகட்டும்

ஏதோ ஓர் அடர்ந்த வனத்தில்
உயர்ந்த மரத்தில்
வளைந்தாடும் கிளை போதும்
இராத் தங்க

என் இறையே
மறுபோது எதுவெனும்
கேள்வியற்ற
பறவையென மாற்றிடு ..!

2

சந்தடிகள்
சலனமின்றி ஊர்கிற
காட்சிப் பிழையாக

அந்தமதில்
இன்னும் தொடங்காத
ஆதி இருள் மயங்க

பசப்பு மொழிகள்
புறமிட்டுத் தோற்கையில்
படர்கிற மோனம்
புறமிருந்து அணைத்து
பொன்னையள்ளி
மஞ்சள் பூவாகச் சொரிய

பனி இன்னும் மூடாத
பரிசுத்தப் பாதையில்
பாரமின்றித் தத்தித் திரிகிற
சிறு குருவியாகிறது மனது

நிர்மலத்தின் ஸ்பரிசம்
நிச்சயம் நிரந்தரமல்ல
விளிம்பு தொட்டு
ஓய்ந்து விழுந்தபின்
சூழப்போவதென்னவோ
தீண்டி எலும்புருக்கும் குளிர்

இருந்தும்
கிருபை யாசித்து
தட்டி ஓய்ந்த பின்னரே திறக்கப்படும்
கதவுகளை விடுத்து
கண் போன போக்கில்
கால் செல்லுகிற உலா
சமயங்களில்
மீட்பும் ரட்சிப்பும்
அருளத்தான் செய்கிறது.


பித்தென்பது பெரும் பிறழ்வு

1

மொத்தமாய் கொட்டி முடித்ததாய்
மேகம் நகர
பாரம் கழிந்ததென்பது
என் நினைப்பு
ஒளித்து வைத்திருக்கும்
சில துளிகள்
பொழிவதற்கல்ல என்பது
அதன் கணக்கு.

2

ஆயிற்று
இதுதான் நிகழ்ந்தது
தாண்டி விடு என்பது
குற்றம் சாட்டப்பட்ட
உனது வாதம்
நடுவில் ஊர்வது
எதுவெனப் புரியாத வரையில்
தாண்டவும்
எடுத்து எறிவதுமான
குழப்பம் இனி ஆயுள் பரியந்தம்

3

தண்டனை என்பது
நீ எனக்குத் தருவதும்
நான் எனக்கே அளித்துக் கொள்வதுமென
ரட்சிப்பின்
இருவேறு நரகக் கதவுகளால்
ஆனது
தட்டினால் திறக்கப் படுவதும்
தட்டிய பின்னர்
மூடப் படுவதுமென….

4

வட்டமிட்ட கிருஷ்ணப் பருந்தை
கல்ப காலங்களுக்குப் பிறகு
தரிசித்ததில்
கிருஷ்ண கிருஷ்ண
என்ற எனது குரல்
பாட்டியின் குரலாக எதிரொலிக்க
வட்டமென்பது
சுழற்சிதானே…

5

தவறுகளுக்குள் தொலைந்து போனவளை
கண்டு பிடிக்கும்
முயற்சியிலிருக்கிறாய்
மீட்டெடுக்கும் பாதங்கள்
நிச்சயமாக உனதல்ல
இந்த யுகத்தில் வாழ்கிற
எவரிடத்திலுமல்ல
மீள்வது மீள்வதை இல்லையென
ஊர்ஜிதமாகாத வரையில்
தன்னைக் காட்டிக் கொடுப்பதினும்
கல்லாயிருப்பது
உத்தமம் என்பதே அவள் விருப்பு.


 

About the author

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website