- காலாவதியான மனங்கள்
பால்ய காலத்தில் வாழ்ந்த
வீட்டின் பெரியதெரு
வெகுவாகவே சுருங்கிவிட்டது
முன்பு லாரி போன ரோட்டில்
இப்போது சைக்கிள் செல்லத் திணறுகிறது
வாய்நிறைய பேசும்
மனங்கள் காலாவதியாகி
புன்னகைக்க யோசிக்கும் மனிதர்கள்
நிரம்பி வழிகிறார்கள்
சோறு அள்ளித் தட்டில் வைத்து நீட்டும் அத்தையின் வீட்டில்
அவரது மகள் சாப்பிடுறீங்களா என்ற கேள்வியோடு மட்டும் முடிக்க.,
பழைய நினைவுகளைப் பசிக்கு விருந்தாக்கியபடி
வீடு நோக்கி
பேருந்து ஏறி வந்தேன்..
***
- சாலையோரப் பயணமொன்றில் …
சாலை நடுவே காகம் ஒன்று
இறந்து கிடக்க
வாகனம் நிறுத்திக் கிடைத்த பொருளால்
இறந்த காகத்தை ஓரம் தள்ளினேன்
மரித்தபின் காப்பற்ற என்ன இருக்கிறது
கண்முன்னே நசுங்காமலாவது பார்த்துக்கலாம் என்ற விரக்தியில்
வாகனத்தில் ஏறி முன்னே நகர
அணில் ஒன்று கடப்பதை பாரத்து
சட்டென வண்டியை நிறுத்த
ஏதோ ஒரு குற்றவுணர்வை
மனம் சமன் செய்துகொண்டிருந்தது.
***
- சாமானியனின் ஜீவகாருண்யம்
பிராய்லர் கடையில் நெடுங்கூட்டம்
ஒவ்வொரு கோழியாய் பிடித்து
அரையும் மிசினுக்குள் விடுகிறார்கள்
அது வலியில் கத்திக் கறியாக
அடுத்த கோழிக்கு அவன்
கை நீள்கிறது
தன்முறைக்கு காத்திருக்கும்
ஒவ்வொரு கோழியின் கண்களையும்
உடல் நடுக்கத்தையும்
காணச் சகியாது கிளம்பிவிட்டேன்
“இப்போது இதைத் தின்னாவிட்டால் என்னாக போகுது”
என்ற முடிவோடு வீட்டில் நுழைய
மசாலா வாசத்தோடு
பக்கத்து வீட்டு அக்கா கோழிக்குழம்போடு நிற்க
எனது ஜீவகாருண்யம்
கண நேரத்தில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.!