நீ
அந்தரங்கமாய்
அபிஷேகித்தச் சொற்கள்
கோமுக வழியிறங்கி
நன் நிலத் தன்மையை
இரு நூறாண்டுக்குமாக
நெகிழச் செய்தது
தேவி
பாதம் உணர் மென் நிலையை
உடல் முழுதுமுணர்ந்த நொடி ததும்பிய விசும்பு
நன்னீரீல் நனைக்க
அண்டம் குளிர்கிறது
விளைகிறது உறவொன்று
மந்திர ரேகையோடும் பாதங்கள்
மண் தொடாது
மலராய் கைத்தாங்குவதற்கு என்று
வாய்ப்பு நல்கக் கேட்ட அன்பினை
இம்மி இம்மியாகக் கிளை நரம்புகளிலும்
பரவ விட்டு
அன்னப் பாத்திரம் நோக்கும்
பட்டினிக் குழந்தையாக
இதயம் நோக்கும் நொடியில்
எதிர்பார்க்கும் மொழி
“அவ்வளவும் நீ “. . .
அணிவகுத்து நிற்கும்
கடமை உரிமையினும்
பெரிதென நீங்கள்
பித்தம் கொள்கையில்
நிஜமென உருவெடுத்தப் பொழுதுகளோ
சாவகாசமாய் கூராயுதத்தில்
கீறிச் சொல்லும்
“அவ்வளவுதான் நீ “
தோள் அமரா
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களில்
தரையிறங்கா
பறவையின் இறகில்
கனாக்களை வைத்து
நிறமற்று நிலமுமற்று
காற்றிலாடும் களங்கற்ற நேசம்
பொசுங்கும் மணம்
கொல்லவில்லையா!
நிர்கதியான மனதின் விசும்பல்
மயானத்தில் சுழித்து மேலெழும்
புகையினூடே கலந்து
வானேகி
நீர்மத் துளிகளாய் மண்கலக்கையில்
எனையெரித்த இடத்தில்
ரோஜா பூத்திருக்கும்தானே…
கிளையமரா புள்ளொன்று
தனிமை வனத்திற்குள் பறந்து
தொலையும் திசையெதுவென
சுற்றிக் கொண்டிருந்த நெடுங்காலத்திற்குள்
‘கரமொன்று” நீண்டது
கரத்தின் விரல்களனைத்தும்
தழைத்தோங்கிய
தன் இடமென்று
அமர்ந்து கொண்டது புள்
இறகு நீவி
சிறகசைத்துக் கொண்டது
மகிழ்ந்தது பாடியது
கிசுகிசுத்துக் கொண்டது
பார்வையை வண்ணங்களில்
முகிழ்த்துக் கொண்டது
இதயம் சிம்பொனி இசைத்தது
நீண்டு விரிந்த ‘கரத்திற்கு’
மகுடம் சூட்டியது
விரல்களை
சுவர்க்கமென்று கூவியது.
திடுமென விரல்கள் மடக்கப்பட்டன
…..
தவித்த ஒரு நாளுக்குப் பின்வந்த
நாட்களில் ‘கரமும்’ காணாமல்
அவலக்குரலெழுப்பி
காடதிர அழுது சிதைந்தது
மரங்களும் பூக்களும்
காய்களும் கனிகளும்
தீய்ந்து போன நெடி வர
அலகைக் காற்றில் தீட்டிக் கவனிக்கிறது
தசையும் காலும்
எலும்பும் மஜ்ஜையும் கூட
பொசுங்கும் வாடை உணர்கிறது
நாற் திசையும் நோக்கி
நடுக்கத்துடன்
தளர்ந்து
குழிந்த விழிகளை
தன் மேல் செலுத்துகிறது….