cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

ஒலிகளில் பூத்தொடுத்தவனுக்கு …


1.

மலைப்பாதையின் இடையில்
கரகரத்த வானொலி
சட்டென்று தெளிந்தபின்,
‘பார்ப்பதற்கு விசேஷமாக எதுவமற்ற’ இடத்தில்
இங்கே நிற்கலாம் என்று சொல்ல நினைக்கிறாயா,
காரணம் கேட்பார்கள்.
இந்தப் பாட்டு முடியட்டும் என்று சொல்வாய்,
வினோதமாகத்தான் பார்ப்பார்கள்.
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாமே
இன்றில்லாத வசதியா என்பார்கள்.
‘அவள் எழுதும் கவிதைகளை
விதி புகுந்தே திருத்துதம்மா’
என்று எதுவோ எங்கிருந்தோ
உனக்குச் சொல்லி அனுப்புவதாக
நீ மட்டும் நம்புவாய்.
உனக்கு விளக்கத் தெரியாது,
இவர்களுக்கு நேரம் கிடையாது.
எங்கிருந்தாலும்,
தொடங்கிய பாடல் மௌனித்தாலும்,
மற்ற புலன்களை அடைத்துக்
காதுகளை மட்டும் திறந்திருக்க
உனக்குத் தெரியும்.
ஆண்டு ஆண்டுகளாக
அப்படியான காதுகளில்தான்
அவன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான்
‘இன்று நீ எந்தப் பக்கம்?’

2.

கைசோரத் தொட்டிலாட்டித்
தூங்கவைத்த பிள்ளை
அலமாரியைத் திறந்து மூடிய சத்தத்துக்கு
விழித்துக்கொண்டு அழுவதைப் போல
அனத்துகிறது மனசு.
‘பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை..’
ஒரு குழைவில் வைராக்கியம் உடைக்கும்
இவன் குரலை என்ன செய்ய..
நீலச் சுவாலை அலட்டாமல் எரியும்,
கரிப்பிடிக்காமல் பராமரிக்கப்படும்,
சிம்னியுடன் கூடிய
நவீன அடுக்களையில்
கண்ணைக் கசக்கும் புகைக்கும்
பாதுகாப்பான அழுகைக்கும் எங்கே போக..
வாழ்வென்ப
யாருமே பார்க்காவிட்டாலும்
முதல் துளி நெகிழும் முன்
சாக்காகக் கிடைத்துவிடும்
பாதி வெட்டிய
நல்ல வெங்காயம்.

3.

இன்னும் தண்ணீர் குடிக்கச் சொல்லும்
மருத்துவ நிர்ப்பந்தத்துக்கும்
வெறுந்தண்ணீரையும் குமட்டித் தள்ளும்
இளஞ்சூலின் ஒவ்வாமைக்கும்
மத்தியில் தவிக்கிறாள் ஒருத்தி;
தனியாகவே பரிசோதனை முடித்து,
தனியாகவே மருத்துவரைப் பார்த்து,
தனியாகவே மருந்தும் வாங்கிவிட்டு,
அலைபேசியைச் சீண்டிச் சீண்டிப் பார்த்தபடி
வழித்துணைக்குக் காத்திருக்கிறாள்
பேச்சுத்துணையில்லாத ஒருத்தி;
நிறைசூலின் கனத்துக்குக்
காத்திருப்பில் கண்கள் கிறங்கப்
பசித்திருக்கிறாள் ஒருத்தி;
‘ஃபோனை சைலண்ட்ல வைம்மா’
எச்சரிக்கையைக் காதில் வாங்காமல்
சத்தம் கூட்டி,
குறைத்துக் கூட்டித்
தன் புதையலைப்
பகிர்ந்தளிக்கிறாள்
எல்லாருக்குமான ஒருத்தி;
‘பாரதி கண்ணம்மா..
—— சின்னம்மா
—— பொன்னம்மா’
மூடிய கதவுக்குப் பின்
சீட்டுச் சீட்டாக
ஆதுரத்தை
எழுதியனுப்புகிறாள் ஒருத்தி
கோடிட்ட இடங்களை
அவன் குரலால் நிரப்பியபடி.


 

About the author

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website