1
எப்போதும் முளைக்கிறது
மரணம் குறித்த பயம்
சாலையைக் கடக்கையில்
சவத்தைத் துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள்
வேண்டுமென்றே
மேலே வந்து முட்டி
முத்தத்தால் கன்னத்தை
சோறுண்ணச் செய்து
ஓடும் மகளைப் பார்க்கிறேன்
இப்போதும் முளைக்கிறது
மரணம் குறித்த பயம்.
2
திரும்பிப் பார்க்கச்
செய்ய
மேற்கொள்ளும்
சாகசங்கள்
தீர்ந்து களைத்த
அமைதி
போதுமானதாக இருக்கிறது
திரும்பிப் பார்க்கச் செய்ய.
3
தலைப்பின்மீது அமர்ந்து கவிதையைப் பார்த்துக் கொண்டிருப்பவள்:
வாகாக அமர
‘பா’வை கொஞ்சம் நீட்டிப் போடச்சொல்கிறாள்
லீலா அக்கா
தமிழில் முதுகலை படித்தவளின் பணி தட்டச்சுப் பயிலகம் நடத்துதல்
தவிர பிழைகளைக் கண்டறிவது
வாழ்த்துகளுக்கு ‘க்’ வராது
இங்கெல்லாம்
ஒற்றெழுத்து மிகும்
அஞ்சலி செய்திகளுக்கு RIP இடக்கூடாது
மன்னிக்கவும் பதிலாக பொறுத்தருள்க என
பிழை திருத்துபவள்
இப்போது கூட இக்கவிதையில் கலந்த
ஆங்கிலத்தைத் திட்டிக் கொண்டிருக்கிறாள்
மூன்று பிள்ளைகள் ஆனபிறகும்
செலவுக்குக் காசு கேட்கும் மாமா பற்றி விசாரிக்கையில்
அடுத்த கேள்விக்கும் சேர்த்து
‘நாங்கள் காதல் மணம்..
விரும்பியேற்கும் பிழைகள் உறுத்துவதில்லை சகோ’ எனச் சிரிக்கிறாள்
நானிதைச் சொன்னதில் முறைக்கும்
வாழ்வையும் வலியையும்
தமிழால் கடப்பவளுடன்
முடிவில் ஆச்சரியக்குறி இடுவதா
முற்றுப்புள்ளி வைப்பதா என விவாதிக்கக்
காத்திருக்கிறது வாதம்
பிறகு சந்திக்கிறேன் உங்களை