மீளாத்துயரில் பரிதவித்திருக்கிறேன்
ஒரு கவிதையின் சிமிட்டலில்
தோள் சாய்க்கிறாய்
அச்சமூட்டும் கனவில்
விழித்த இரவு
ஒரு கவிதையின் சொடுக்கில்
மடைமாற்றுகிறாய்
சாதித்த பரவசத்தில்
உறக்கமின்றி உருட்டுகிறேன்
ஒரு கவிதையின் அரட்டலில்
சமன் செய்கிறாய்
தன் வெற்று முலையுறிஞ்சி
கதறும் மழலையை அமர்த்த
ஒரே முகத்தை அஷ்ட கோணலாக்கி
வசப்படுத்தும்
ஒற்றைத் தகப்பனாய்
சொற்களைக் குலுக்கிப் போட்டு
மசகெண்ணையாய்
நீவி விடுகிறாய்
என்னின் உயவியைக் கண்டெடுத்துக் கையளிக்கும்
நீயென் இறை
ஒப்புக் கொள்கிறேன்.
எல்லா தர்க்கங்களையும்
எல்லா தார்மீகங்களையும்
எல்லா அறங்களையும்
எல்லா விழுமியங்களையும்
எல்லா நியாயங்களையும்
எல்லா நம்பிக்கைகளையும்
எல்லா பிணக்குகளையும்
அப்படி அப்படியே
கைநழுவ விடுகிறாய்
இழுத்துப் பிடித்தபடி இருக்கும் மறுமுனை
மயிரைப்போல ஒவ்வொருவர் தலையோடும் சிக்கிக் கொண்டிருப்பதை
வேண்டுதலின் முணுமுணுப்பை
எள்ளும் கடவுளைப்போலப்
புறக்கணிக்கிறாய்
காடு கொள்ளா சில்வண்டின்
அலறலாய் அலைகின்றன
அவையாவும்.
சூல்கொண்ட நொடி முதல்
குடையத் தொடங்கி
பொழுதெல்லாம் சிந்தை மயங்கி
சிச்சிறிதாய் வார்த்தெடுத்து
அடி அடியாய் மெய் செதுக்கி
துடி கொண்டு உயிர் நிரப்பி
பெரு விரலின் பெரு வெடிப்பில்
நழுவி விழும்
பரிதவிப்பு
கவிதை.
சின்னஞ்சிறு மென்னுடலில்
பறக்கப் பயிலும் நடுக்கத்தில்
விழுந்தெழுந்து விழுந்தெழுந்து
நிலன் நிறுத்தும்
கால்களைப் புறந்தள்ளி
உந்தி உந்தி சிறகுயர்த்தும்
பெருமுயற்சி
கவிதை.
முங்கி முங்கி
பருக்கைக்கல் பொறுக்கி
மூச்சமிழ்த்தி உயிர் திணறி
விசை எதிர்த்து மெய் செலுத்தி
பேரலையில் மிதக்கும்
போதம்
கவிதை.