cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


1. தத்துவம் அஸி

எழுதும் கவிதை என்பது
அவரவர்களுக்கானத் தனித்துவம்
அவரவர்களுக்கானத் தத்துவம்

எழுதும் கவிதை என்பது
காலம் உள்ள காலம் வரைக்கும்
நிலைத்திருக்கும் சத்தியம்
காலத்தாலும்
கொள்ள முடியாத நித்தியம்
ஆழ்மனக்கடலில்
அலைந்தெடுத்த நித்திலம்

எழுதும் கவிதை என்பது
கடவுள் ஆணானால்
அவனது சுக்கிலம்
கடவுள் பெண்ணானால்
அவளது சுரோணிதம்

மொத்தத்தில் கவிதை என்பது
தத்துவமஸி
அதுவே நீ ஆவாய்
நீயே அது ஆவாய்.

2. மொழியின் மரபணுக்கள்

என்னிடத்தில் தனது அப்பாவை
சின்னதாக உணர்ந்த அம்மா
என்னைக் ‘குட்டி அப்பு’ என்று தான் அழைக்கிறாள்

அக்காவிடத்தில் தனது அம்மாவை
சின்னதாக உணர்ந்த அப்பா
அவளை ‘அம்முக்குட்டி’ என்று தான் அழைக்கிறார்

அப்பாவிற்கு பதில் அப்புவும்
அம்மாவிற்கு பதில் அம்முவும்
எவ்வளவு அழகான சொற்கள்!

அப்பு என்றால் நீர் என்று பொருள்
இங்கே அது உயிர்த்திரவம்
அன்னை என்றால் அன்னம் போல
அம்மு என்றால் சோறு

மரபை மீறத் துடித்தாலும்
மொழியால் முழுமையாக
மரபை மீறிவிட முடியாது

சொற்கள் மொழியின்
மரபணுக்கள்.

3. மெழுகுநிலா

அதிகாலையில்
மேற்கு வானில்
காணும் நிலா
கிழக்கிலிருந்து
சூரியன் என்னும் சுடரை
தன்மேல் வாங்கிக் கொண்டு
மேகத்தோடு மேகமாய்
வானத்தோடு வானமாய்
கரைந்து விடப் போகும்
வட்ட வடிவ மெழுகுவர்த்தி.

4. கூண்டும் குடுவையும்:

சிறகுகள் செவுள்களாக
வானம் கடலாக
பறத்தல் நீந்துதல் ஆகிறது
மீன்களுக்கு

பரந்த கடலில் நீந்திய ஞாபகத்தில்
குறுகிய குடுவையின்
கண்ணாடிச் சுவர்களை
அடிக்கடி முட்டிப் பார்க்கின்றன மீன்கள்

சிறைப்படும் போது
கூண்டுப் பறவையும்
குடுவை மீன்களும் ஒன்றே

மீன்கள் வளர்க்கிறேன்
பறவைகள் வளர்க்கிறேன்
என்று சொல்வதெல்லாம் அபத்தம்

பறவை வளர்க்க வேண்டும் என்றால்
வானம் அளவு கூண்டு வேண்டும்

மீன்கள் வளர்க்க வேண்டும் என்றால்
கடல் அளவு குடுவை வேண்டும்

அப்படி இல்லாத வரை
அவற்றின் விடுதலை
விடுகதையாய் தொடரும்.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website