மலைக் கோயில் பாதையில்
முன்னும் பின்னும் படி செதுக்கியவன்
இடையில் மலையை மலையாகவே
விட்டுவைக்கிறான்.
அது சிற்பியும் தெய்வதமும்
சேர்ந்து சிரித்த
சிரிப்பின் கீற்று.
இரக்கம் உள்ள
மலைகளில் ஏறியவர்களால்தான்
இறங்கி
வீடடையமுடிகிறது.
வேண்டுதலுக்காக
ஒவ்வொருபடிக்கும்
சந்தனமும் குங்குமமும்
இருவிரல் வழிய வழிய
வைத்துக்கொண்டிருக்கிறாள்.
தடுக்கிவிழாதே
பார்த்து பார்த்து
ஒவ்வொரு படியும் அவளின்
காதோரம் சொல்கிறது .
எல்லா மலைக்கோயிலிலும்
யாரோ ஓர் அப்பா
தோள் வழியே
இருகால் வழிய வழிய
மலை ஏறுகிறார்.
ஒரு குழந்தையும்
மலை ஏறாத நாளில்
ஏறிய யாரும்
இறங்க முடியாது
என்பது ஐதீகம்
என்று யாராவது ஒருவர்
யாராவது ஒருவரிடம்
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
இருகால் வழிய வழிய
தன் குழந்தையுடன்
மலை ஏறுகிறார்.