1.
நேற்றிரவு
காலியான
புத்தகத்தாளின்
நீட்சியை,
ஒரு
ஓரமாய் கட்டி வைத்த
மஞ்சப்பை வழி மறித்தது.
மிகச்சரியான
அச்சந்திப்பில்
உரையாடல் ஒன்றும் அவ்வளவு நீளவில்லை.
உறக்கம் ஓரிடம் சென்றும்,
விழிப்பு ஓரிடம் சென்றும்,
நீண்டு சென்ற புத்தகப் பைக்குள்
தன்னை முடக்கிக் கொண்டது.
என்னவெல்லாம் தோன்றுமோ
அதுவெல்லாம் எழுத்தாய்
நின்றது.
ஞாபகத்தில் ஒன்றுமில்லாத
வண்ணங்களில் வானவில்லைப்
பூக்கச் செய்தது.
ஆழ்மனதின் வேர்கள்
புத்தகத் தாளைக்
கிழித்து ஊன்றி
தீக் குழம்புகளுக்குள்
சென்று கொண்டிருந்தன.
கொதித்தெழும் குழம்பில்
இன்னும் கனமாய்
பிரபஞ்சத்தின் அளவுக்குத்
தன்னை சுழட்டி
பூகம்ப அதிர்வுகளை
பூமியின் ஆழத்திலிருந்து
தருவித்தது போலிருந்தது.
எந்த உணர்வுகளும்
பூகம்பம் என்ற பெருவெடிப்பை உமிழவில்லை…
விம்மி அழுத கண்ணீர் மட்டும்
தீ குழம்பெனச் சுட்டெரித்தது.
2.
ஒரு ராட்சசனைப் போல
உன்னை
நான் விழுங்கும் போது
உறைபனிக் காடென
மயிற்கால்கள் சிலாகித்து
நின்றன.
மற்றுமொரு
தீர்த்தத்தை மாறி மாறி அருந்தும்
ஒரு பக்தனாய் எழுந்து நின்றேன்.
விஷத்தினை அருந்தும்
படபடப்பில்
உன் கழுத்தை
இறுக்கமாய்க்
கட்டிக் கொண்டேன்.
நீண்ட என் குழலுடனான
உரையாடல்களுடன்,
கோதும் உன்
விரல்களைத் தவிர்க்கிறேன்.
பின்னிட்டு நான் இடறி,
நீல நிலாவெனத் தேய்கிறேன்.
வண்டென உன் இதயத்தினுள்,
சொல்லாத சில சொற்களைக்
கூடு தைக்கும் குருவியைப்
போல் தேடி அலைகிறேன்.
வானத்தை அண்ணாந்து
பார்த்துக் கொள்கிறேன்.
அன்றைய நாளில் …..
நீயும் நானும் நட்சத்திரக் காட்சிகளை
மழைக்குச் சாட்சியாக்கிக் கொண்டிருந்தோம்.