cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

ஸூரா அல்-திருட்டு 


அளவற்ற திருட்டின் பெயரால் ஆரம்பிக்கிறேன்  

ஓ! திருடுபவரே வீடு வீடாகத் திருடுவீராக வீடுகளெல்லாம் இங்கு திருடப்படுவதற்காகவே கட்டப்படுவதைப் புரிந்துகொள்வீராக ஓ ! இரவு பகலெனத் திருடுபவரே ஏன் ஒரே ஒரு சாவியை வைத்திருக்கிறீர் மேலும் அதனைக் கொண்டே எல்லாக் கதவுகளையும் திறக்கவும் முனைகிறீர் பின் திறக்காத கதவுகளையிட்டுக் கவலையும் கொள்கிறீர் திறக்காத கதவுகளிருக்கும் வீட்டுக்காரர்களைத் திட்டித் தீர்த்தது போதும்  ஓ ! திருடுபவரே கதவுகளின் வித்தியாசங்கள் பற்றி அறிவீராக உங்களின் சாவிக்குத் திறந்து கொள்கிறதே, அவ்வீட்டிற்குள் நீங்கள் கைப்பற்றுபவைகளை ஒப்பிட்டுப் பார்க்கவே மாட்டீர்களா  நீங்கள் திருடி வருபவைகள் எல்லாம் சதுரவடிவங்களாகவே இருக்கின்றன இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா ஒ ! திருடுபவரேஅந்த ஃபாகனைப் உற்றுப் பார்ப்பீராக அவன் பைகளுக்குள் இருந்து எடுக்கும் சாவிக் கொத்துக்களை பின்பவன் செய்வதையும் கவனியுங்கள் அந்தக் கதவடியில் அமர்ந்து கொள்ளும் அவன் வைத்திருக்கும் சாவியில் ஆயுதம் கொண்டுரசி மாற்றங்கள் செய்வதை மேலும் பாருங்கள் அவன் திருடிவரும் பன்மையான வடிவப் பொருட்களை நாம் அவனையே உங்களுக்கான முன்னுதாரணமாய் ஆக்கினோம் நீங்கள் வைத்திருக்கிறீர்களே அந்த சாவியில் மாற்றங்கள் செய்தாலன்றி உங்களால் புதிய வீடுகளில் திருடவே முடியாது மேலும் புதிய வடிவங்களை கண்டுகொள்ளவும் மாட்டீர் நாம் திருடுவோருக்காகவே அன்றி  இந்த வசனங்களை எல்லாம்  இங்கு புனைந்து வைக்கவில்லை யாரெல்லாம் முற்றிலும் புதிய வீடுகளில் திருட விரும்புகிறார்களோ அவர்களுக்கே இதனை வழிகாட்டும்படி அமைத்தோம்


இது அல்-குர்ஆனின் சொல்லல் முறைமையினையும் அதன் பிரதி வடிவத்தினையும் பின்பற்றி செய்யப்பட்டிருக்கும் ஒரு கவிதை வடிவம்.

About the author

இமாம் அத்னான்

இமாம் அத்னான்

இமாம் அத்னான் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். இளநிலை சமூக ஆய்வாளராக நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.
கவிதை, Flash fiction, கவிதைப் பிரதிகள் மீதான கோட்பாட்டு விமர்சனங்கள் என எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்.

இவருடைய 'மொழியின் மீது சத்தியமாக' எனும் கவிதைத் தொகுதி மோக்லி பதிப்பகத்தின் வெளியீடாகவும், 'மந்திரிக்கப்பட்ட சொற்கள்' எனும் flash fictions பிரதிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாகவும் வந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website