1)
நீலம் படிந்த
திரைச்சீலைகளை அனுதினமும் அகற்றியபடி
கூர் மழுங்கிய சிந்தனைகள்,
புராதனமிக்க அவள் பூர்வம்
கண்ணகியா மாதவியா அகழாராய்ச்சிக்குள்
நீண்ட காலப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது,
செல்பேசியில்,
வழியும் வக்கிரத்தை
அசிரத்தையாய்க் கடக்கும்
நடு இரவுக் கண்களில்,
கற்களைப் போல் தங்கட்டும்,
இந்த உலகின் கடைசிப்பெண்ணின் கடைசி யோனி.
◊ (உ.பி மொரதாபாத் சிறுமிக்காக)
2)
அக்கம் பக்கம் பார்த்தே
நகரும் வெட்கம் ,
மணப்பெண் ஆகும்போது
சற்று தயங்கத் தொடங்குகிறது,
பிள்ளைப்பேறுக்கு முன் நிழலாக வருகின்ற வெட்கம்,
குழந்தை ஈன்றெடுக்க,
இன்னும் நடைபயில்கிறது.
உலகின் ஞானோதய கால்கள்
விரைந்து வருகின்றன
பெண்ணின் மேனி காண
சிவனோடு சக்தி என்ற போதும்
தீராத போகத்தின்
திறப்பு அவளே,
நோய்கள்
போர்கள்,
வன்முறை,
அவலம்,
பிய்த்துத் தின்கிறது மிச்சம் இருக்கும் தன்மானத்தை
ஆகாசத்தின் மூலையெங்குமிருந்து கண்காணிக்கப்படும்
பெண் உடல் கொண்ட
நீங்காத நிர்வாணம்,
தினந்தோறும்
புதிய புதிய பெயர்களில்.
3)
ஆசிரியர் பணியோ
அலுவலக உதவியாளரோ
உதவிக் காவலரோ
ஐடி அலுவலோ
உள்ளாட்சிப் பணியாளரோ
வருமான வரி அதிகாரியோ
மருத்துவரோ
மாவட்ட ஆட்சியரோ,
முதல்வரோ
விண்வெளி விஞ்ஞானியோ,
இராமனுக்கு நீ சீதை
அவ்வளவுதான்.
Subscribe
0 Comments