1.
பிழைபடாத அன்பு
இனி
மறைக்க
ஒன்றுமேயில்லை
என்பதாக
உள்ளத்தை முற்றிலுமாக
திறந்து காட்டுவதும்
உயிர் வதைக்கும்
காயங்களை உருவாக்கிய தவறுகளை
தருணங்களை
மறுபடியும்
மறுபடியும்
மன்னித்தவாறே
கடப்பதும்தான்
பிழைபடாத
அன்பின்
தளையென
பிணைத்திருக்கிறது
நம்மை.
2.
உள்ளும் புறமும்
அரும்பிய மொட்டினை
அதன் காம்பிலிருந்து
வலிந்து பறிப்பதே
வன்முறையென
நினைப்பவள்,
தாமாக
தரையுதிர்ந்து
காற்றுக்கு
கலைந்து கிடக்கும்
பூக்களை
ஏறெடுத்தும் பாராது
அவசர அவசரமாக
பெருக்கிக் தள்ளுகிறாள்
உள்ளத்தின்
ஆழத்தில்
உறுத்தியபடி
அத்தனைநாள்
அழுந்திக் கிடந்த நினைவுகளைத்
துடைத்தழிப்பதுபோல
3.
வதையின் ருசி
தனிமையில்
தன்னைத் தானே
வருத்திக் கொள்ளும் ஒருவர்
பெரும்பாலும்
தன்பொருட்டு
வதையுறுவதில்லை.
யாரையோ
இக்கட்டிலிருந்து காக்க யாருக்கோ
எல்லை மீறி உதவ
எவர்பொருட்டோ காயப்பட
எனப் பிறருக்காய் வேண்டி
தான் சுமக்கும் பாரத்தால்
தளர்ந்து
தவித்து
தணிந்து
பிறகு
அதுவே தவிர்க்கமுடியாத
பழக்கமாகி
பசிக்கும் மேலானதொரு
ருசியாகி
நிலைத்துவிடுகிறது .
4.
வழித்துணை
காணும்
நதிகளிலும்
நீரோடைகளிலும்
அச்சமறியாது
கால் நனைத்துக்
களித்திருந்த
பால்யத்தில்
எமக்கு இருந்தது;
கனவெங்கும்
மீன்கள் புரளும்
பருவமொன்று.
அந் நினைவுகளை
மீட்க நேரிடும்
அரிதான பொழுதுகளில்
மனதுக்குள்
துள்ளுகிற மீன்கள்தாம்
இப்போதும்
எதிர்ப்படும்
எந் நீர்நிலையையும்
அதன் ஆழமறிந்து
தயங்கித்
தடுமாறாமல்
கடக்கத்
துணை செய்கிறது.