cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

சாகிப்கிரான் கவிதைகள்


  •  வெளி

மூன்று பையன்கள்
பேட்டைக் கட்டிக் கொண்டு
சைக்கிளில் செல்வதை
இரயிலுக்குள் வெளியாகவும்
வெளிக்குள் தனியாக இரயிலும்
நிகழ்ந்து கொண்டிருந்தது.


  •  தீர்ப்பு

வெறி பிடித்துவிட்டதாக
அடித்துக் கொன்றார்கள்
பிறகு
ஒவ்வொரு குதிரையும்
தன் வழியில்
கிளம்பி சென்றது.


  • தேர்வு

அந்தப் பாழைடைந்த
ஊரைக் கடக்கும்போது
பார்த்தவளின் நைட்டி
ஒரு தேவதையின்
உடையாகவே இருக்கிறது
அவர்கள் எங்கிருந்தாலும்
தேவதைகளாகிவிடுவது
ஆடைகளின் மோட்சம்.


  • இருப்பு

எதுவுமே நடக்காததுபோல
அந்த ஹெல்மெட் கிடந்தது.
மேட்டிலிருந்து பள்ளத்திற்கு
அது மட்டுமே உருண்டு வந்தது.
அப்புறம் அது
மக்கும்வரை
அங்கேயே இருந்தது
அநாதையாக.


  •  விதி

வலப்பக்கத்தில் முந்துகிறவர்களைக்
கணித்துவிடலாம்
இடது பக்கம் முந்துவது
நால்வழிச் சாலைகளின்
மிச்சம் போலிருக்கிறது
அவனுக்கு நான்
வலதுதான் என்பதுதான்
புதிய வாதம்
புதிய சவாலும்
தேவனே!


 

About the author

சாகிப்கிரான்

சாகிப்கிரான்

கவிஞர் வே.பாபுடன் இணைந்து “தக்கை” எனும் அமைப்பை நிறுவிய கவிஞர் சாகிப்கிரான், சேலத்தில் கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர் தொண்ணூறுகளிலிருந்து இலக்கியத்தில் இயங்கி வருகிறார். தக்கை சிற்றிதழ் நடத்தியதோடு, பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை தக்கை அமைப்பு உடன் செயல்பட்டவர். வண்ணச் சிதைவுகள், அரோரா உள்ளிட்ட நூல்கள் இவரின் எழுத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளாகும். இவர் எழுதிய மொழிபெயர்ப்புகள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளும் கவனத்திற்குரியவை.

Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments

சின்னச் சின்னதாய் தத்துவார்த்தத் தெறிப்புகளோடு சிறப்பான கவிதைகள். வாழ்த்துக்கள் தோழருக்கு.

You cannot copy content of this Website