அவன் பேசவில்லை.
பாடுகிறான்…
இவன் கேட்கவில்லை.
ஓடுகிறான்…
பாடல் பாதங்களை ஈர்க்கிறது.
இவன் பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறான்.
அவன் மாமலை தவிடுபொடியாகப் பாடுகிறான்.
வெகுநேரம் ஓடியும் பாடல் நிற்கவில்லை.
மலையும் உடையவில்லை.
பாட்டுக்காரனும் ஓட்டக்காரனும் கைகுலுக்கி…
ஒப்பந்தமிடுகின்றனர்.
மலையை மயிரால் கட்டியிழுப்போம் என.
மலையுச்சியை மயிரால் கட்ட ஒரு மரமேறியை அழைக்க…
கூலியாக பாயசம் கேட்கிறான்.
கதை முடிவில்…
மரமேறி பாயசத்தை வழித்து நக்கிக்கொண்டிருக்கிறான்.
பாட்டுக்காரன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறான்.
ஓட்டக்காரன் சிம்மாசனத்தில் காலாட்டிக்கொண்டிருக்கிறான்.