cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

கயூரி புவிராசா கவிதைகள்


 

1.

திரண்டு தெறிக்கும் கணம்

உன் வருகையில் சுடரும்

இசையில் மினக்கெடுதல்கள் ஏதுமில்லாத

ஒரு பருகுதல்

 

மேகத் திரள்வுகளில் எம்பி

பெருவிரலில் தொடங்கி உன் இடம்வலமாய்

முடியும் இந்த பாதங்கள்

உருகியபடி உயிரின் கிழக்கு

புலர

மென்னோடு கனமில்லை தானே

நத்தைகளுக்கு

 

துலக்கமடையாத ஆரண்யங்களில்

கொஞ்சம் பச்சை

கொஞ்சம் கடல்.


2.

மௌனிப்பின் தரிசனங்களில்

சுடரும் நிழலில் முறிந்துவிழும்

கிளை நிராகரித்த இலையொன்றின்

விம்மலில் வெடித்துக்கிளம்பும்

விரக்தி

 

கண்களின் பள்ளத்தாக்கிலிருந்து

மேடேறி மூக்குத்தியில்

கல்லாகும்  ஒருதுளி

நெருங்கிக்கொண்டிருக்கும் கொஞ்சமும்

இரக்கமற்ற இந்த நீளிரவு

 

உடல் வெப்பங்குறைய நழுவி

இலக்கில்லாத சுமையழுத்த

வெடித்துச்சிதறும் வலித் தெறிப்பு

 

பருந்துகளின் இரைச்சலில் அலறித்தவிக்கும்

ஒற்றை வெள்ளாட்டுக்குட்டியின் வயிற்றில்

எய்யப்பட்ட அம்பில்

 

உணர்விழந்துகொண்டிருக்கிறது

சற்று முன்னர் உண்ட நீளப்புல்

 

நாசித்துவாரம் ஒழுகி இறங்குகிறது

நிறங்களற்ற வெறுமை நீர்


3.

காற்று நடனங்களில் கிளையோடு

ஊடல்கொள்ளும் இலைகளை

வேடிக்கை பார்க்கும் பொன் வண்டுகள்

 

களவுபோன கார்காலங்களில் பிடிதவறிய

சொற்கள்

கிளிஞ்சல்களில் அலையுரசும் கருக்கல்களில் ஜன்னல் இறுக்கும்

பிடிவாத விரல்கள்

கனத்துக்கொண்டிருக்கும் பகலை களைந்து ஆசுவாசம் கொள்ளும்

இருளில் நகரமுடியாதபடி

ஒரு இரவு

 

தங்கிச்செல்ல மரமில்லாத

பறவைகளுக்கு வலசை

துயரமில்லை,


 

About the author

கயூரி புவிராசா

கயூரி புவிராசா

இலங்கை சார்ந்த கயூரி புவிராசா தனது 19 வது வயதிலிருந்து கவிதைகளை எழுதி வருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ” ஒரு பகல், ஒரு கடல், ஒரு வனம்” எனும் கவிதைத் தொகுப்பை ‘கடல் பதிப்பகம்’ சமீபத்தில் வெளியிட்டது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website