1) ஒரு அழகி
முதலில் வெறுப்பதுவும்
பின் காதலிப்பதுவும்
செய்பவர்கள்
என்ன தான்
சொல்ல வருகிறார்கள்?
இரண்டுக்குமிடையே
தேவையான அளவு சேதத்தைப் பரிமாறிய பின்பே
காதலுக்கு நகர்கிறார்கள்.
மூளை குழம்பி
நிற்கும் தற்போது
காதலிக்கப்படுபவர்களுக்கு
காயங்களையா, ஐஸ்க்ரீமையா எதை முதலில்
நக்கி ருசி பார்ப்பதென
தலை ‘கிறுகிறு’வென சுற்றுகிறது.
வெறுக்கப்பட்டு
பின் காதலிக்கப்படுபவர்கள்
ஒரு முடிவுக்கு வருவதற்குள்
வெறுக்கப்படத் தொடங்குகிறார்கள்
வேறு சிலரால்.
அந்த வேறு சிலரில்
ஆடி பிம்பங்களும் இப்போது
அடங்கிப் போகின்றன.
2) திறன் மடல்கள்
பெரிய காதுகள் வேண்டும்
பெரிய காதுகள் உள்ள மனிதன் வேண்டும்
வேழத்தினை ஒத்த செவிகள்.
சொல்ல வேண்டியது அவ்வளவு
சொல்ல முடியாததும் அவ்வளவு
சொல்லி விட்டு காலி பாத்திரத்தினை
ஓசை எழ கவிழ்த்துக்
காட்டிட வேண்டும்.
பின் நிம்மதியாக
உறங்கச் செல்லலாம்
இல்லையில்லை, உயிரைக் கூட விட்டு லிடலாம்
கேட்பதற்கு ஓர் உயிர்
இல்லை என்ற
‘வாக்’ தேவியின் கூற்று அதிர்பறையென
துணுக்குற ஒலிக்காது.
பெரிய காதுகளுக்கு
காதுகளுக்கு
உயிருக்கு
பிரபஞ்சத்துக்கு
யார்க்கும், எவருக்கும், யாவருக்கும் கேட்பதற்கும்
எத்தொடர்புமில்லை என இன்னும் உணரா நீயும்
உயிருடன் தானிருக்கிறாய்
பூமிக்குக் கேடாய்.
3) நம்பிக்கைக்கு இறப்பின் சாயல்
குட்டிப் பெண் குழந்தையொன்றின்
அப்பா நம்பிக்கை
பைக்கின் பின்னிருக்கையில் கட்டப்பட்டு செல்கிறது
இளஞ்சிவப்பு நிறத்தில்.
அதன் முன் கூடையில் ஒரு கொத்து
இளம் சிவப்பு ரோஜாக்கள், நடுவில் கருஞ்சிவப்பிலொன்று.
மகள்கள் எப்போதும் தந்தைமைக்கு அன்பிடை ஐயமின்றி சிறப்பு சேர்ப்பவர்கள்.
ஏனோ அந்த ஆழ் நம்பிக்கை
இன்று தன் சாம்பல் நிறமிழந்து
சாலையில் சிதறி அடர்சிவப்பு பூசிக்
கொண்டிருக்கிறது.
அதன் புத்தம் புது சக்கரங்கள்
மஞ்சள் நிற லாரிக்குள்
புகுந்து பாதி நசுங்கித்
தூளாகியிருக்க
மகள் குறித்த கனவுகள்
நிறை மூளை
காகங்கள் கொத்த
இப்படி அடர்சாம்பல்
நிற சாலையில் காய்வது வயிற்றையும் மனதையும் ஒரு சேரப் பிசைகிறது.
போனஸ் பணம்
வந்தவுடன் சைக்கிள் கடைக்கு ஓடிய நம்பிக்கை இப்போது உயிருடன் இல்லை.
நேரமென்பது ஒன்றிரண்டு நேனோ விநாடிகள்
முன்பின் மாறிக் கொள்ளக்கூடாதா சிவனணைந்த பெருமானே.!
அருமை👌🏻