cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

சிதைவுறும் எல்லைகள்

ஃபஷ்றி
Written by ஃபஷ்றி

நாவலொன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
மேசை மீதுள்ள தினசரிப் பத்திரிகை முன் பக்கத்தில்
பூனை ஒன்றின் அசையாப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
துணைவி பால் கிளாசை மேசையில் வைக்கிறாள்.
பாலைக் கண்டதும் படத்திலிருந்த பூனை வெளியே வந்து பாலைக் குடிக்கிறது.
‘ச்சு’ என்று விரட்டுகிறேன்,
சமையலறைக்குள் ஓடுகிறது.
அங்கிருந்து விரட்டுகிறாள் துணைவி.

இப்போது படுக்கையறையினுள் ஓடுகிறது.
தூப்பானை எடுத்துக் கொண்டு படுக்கையறையினுள் சென்று தேடுகிறேன்.
கட்டிலின் கீழ் ஔிந்து கொண்டிருக்கிறது.
மெதுவாக கட்டிலின் கீழே தூப்பானை விட்டு அடிக்க முனைகிறேன்.
துள்ளிப் பாய்ந்து மண்டபத்தை நோக்கி ஓடுகிறது.
நானும் பின்னால் விரட்டிக் கொண்டோடுகிறேன்.

மகளின் பாடப்புத்தகத்தின் இருபத்தேழாம் பக்கத்தினுள்
பாய்ந்து அசையாதிருக்கிறது பூனை.
பாடப் புத்தகம் என்பதால் கிழித்தெறியவும் முடியாது.
அடுத்த நாள் காலையில் மகனுக்கு வைத்த பாலை அருந்திக் கொண்டிருக்கிறது.
மீண்டும் விரட்டுகிறேன்.

சுவரில் கொழுவப்பட்டிருந்த எனது மாமனார், மாமியாரின்
கல்யாண அசையாப்பட ஃப்ரேமினுள் பாய்ந்து
மாமியாரின் காலுக்கருகில் சாதுவாக அமர்ந்திருக்கிறது.
ஃப்ரேமையும் உடைக்க முடியாத நிலைக்குள்ளானேன்.

மறுநாள் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு
இந்தப் பூனையை வீட்டை விட்டு வெளியேற்றும் நோக்கில்
கற்பனையில் எலி ஒன்றை உருவாக்கி ஃப்ரேமுக்கு அருகில் கொண்டு செல்கிறேன்.
எலியைக் கண்ட பூனை ஃப்ரேமுக்குள்ளிருந்து பாய்ந்து எலியை விரட்டிக் கொண்டோடுகிறது.
இரண்டும் பக்கத்து வீட்டுப் பக்கமாக ஓடுகின்றன.

அதன் பின்,
இரண்டு நாட்கள் பூனையின் அரவமே இல்லை.
மூன்றாம் நாள் டீவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பிரதான கதவினூடாக மெதுவாக நுழைகிறது பூனை,
அதன் மேல் அமர்ந்திருக்கிறது எலி.
அதைப் பார்த்த போது
மீண்டும் பூனையை விரட்டும் எண்ணத்தைக் கைவிடுகிறேன்.


 

About the author

ஃபஷ்றி

ஃபஷ்றி

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள சம்மாந்துறை ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில ஆசிரியராக அரச பாடசாலையில் பணி புரிகிறார். கடந்த வருடம் தாயதி பதிப்பக வெளியீடாக இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு "நீல வயலும் பச்சை வானமும்" வெளிவந்தது. நவீனம் கடந்த கவிதைகளை பரிசோதனை முயற்சியாக எழுதி வரும் இவரது கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. வியூகம், படிகள், நீலம், உள்ளம், நடுகல், தனிமைவெளி போன்ற சிற்றிதழ்களிலும் நடு, வல்லினம், காற் புள்ளி, காற்று வெளி, நுட்பம் போன்ற மின்னிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website