மூன்றுதுளிப் பொழுதில்
அமாவாசை பௌர்ணமி பிறையென
கிடைக்கும் கம்பிகளை எல்லாம்
புல்லாங்குழல் செய்து விடுகிறது மழை
வாசிப்பது யார் ?
நிலவின் துளிகளை வாசலில் தோரணமாய்
நிச்சயம் உன்னால் தொங்கவிட முடியாது
பேசாமல் மழையையே காதலித்து விடுகிறேனே.
சீறும் சினங்களைப் பூட்டி
ஒவ்வொரு முறையும் சாவியை
உன்னிடமே தருகிறேன்
வெண்காற்றில் உலவும் பட்டாம்பூச்சியைவிட
சிறைபட்டிருக்கும் பாம்புகள்மேல்
நாட்டம் உனக்கு
அவிழ்த்து ஓடவிடுவதில்தான் அவ்வளவு ஆர்வம்
விடமாகி நெளியும் நாக்குகளில் எல்லாம்
எனது பெயரே எழுதப்பட்டிருக்கிறது
ஆனாலும் ஒருவரிடம்
சாவியைக் கொடுப்பதென்பது
எப்பேர்ப்பட்ட நம்பிக்கை என்றுகூடவா புரியாது.
கவிஞனைக் காதலிக்காதே
உனக்கென நீ நினைப்பது
யாருக்காகவோ எழுதப்பட்டிருக்கும்
உனக்கென எழுதியது
உனக்கே புரியாத புதைமணலில்
குறியீடுகளாய் வரையப்பட்டிருக்கும்
மோகம் கேட்டால் மௌனம் தருவான்
பேச்சுமரத்தின் அத்தனைப் பூக்களையும்
உலுக்கித் தன் தலையில் கவிழ்த்துக் கொள்வான்
தாலாட்டினால் தவிர்ப்பான்
தள்ளிப் போனால் முற்றுப் புள்ளிக்கருகே
மேலும் புள்ளிகள் வைத்துத் தொடர்வான்
ஜீவ நர்த்தனங்களில் பாம்பாகிச் சூழல்வான்
வழியெங்கும் விஷம் கக்கி வந்து
உனக்கு அமர்தம் பொழிவான்
அதில் நஞ்சின் சுவை கொஞ்சமிருக்கும்
உன்னை சாக விடவே மாட்டான்
உனக்காக செத்துப் போக மாட்டான்
பாலை ஒட்டகத்தின் சேமிப்பு நீர்
திராட்சைத் தோட்டத்தின் புளித்த தேன்
நீயும் அவனாக முடிந்ததாலன்றி
கவிஞனைக் காதலிக்காதே !