cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

கோபி சேகுவேரா கவிதைகள்


ண்டியலில் ஒட்டியிருக்கும்
QR கோட் ஸ்கேன் செய்து
5 ரூபாய் அனுப்பிய பக்தனொருவன்
‘மிகவும் அலுப்பாக இருக்கிறது
பேசாமல், நான் கடவுளாகிவிடவா?’
என்று வேண்டிக்கொண்டிருந்தான்.
கடவுள்களின் பரிந்துரையின்படி
கடவுள் ஒருபோதும் சாத்தியமில்லைதானே?
வசீகர போலியாய்.
ண்பா
காற்றின் கூட்ட நெரிசலில்
சிக்காமல் வந்து சேர்ந்த
நீ அனுப்பிய 50ரூபாயில்
மட்ட மதியத்து பசியினைத் தின்று
இயல்பிற்குத் திரும்புகிறேன்
G-Pay என்பது காலத்தின் பாற்பட்டது.
வசஉடை அணிந்த
ஆதாமும் ஏவாளும்
முத்தமிட்டுக்கொள்ள தயங்கியபோது
வரலாற்றுப் பிழைகள் நிகழ தொடங்கியிருந்தது.
நேற்றிரவு DP-யை நீக்கிய ஏவாளுக்கு
முகநூலில்
ஒரு நீள்கவிதை எழுதிய ஆதாம்
அரோமா பேக்கரியில்
உப்பு பிஸ்கட்டை உடைக்க மனமில்லாமல்
எஞ்சியிருக்கும் இஞ்சி டீயோடு
ஏவாளுக்கு ‘மிஸ் யூ’ என்றனுப்புகிறார்.
அரைமணி நேரத்தில்
ஏவாள் அனுப்பிய எமோஜியில்
இந்த உலகம் மீண்டும் உய்த்ததாக அறியப்படுகிறது.
காலம் : திருவள்ளுவர் ஆண்டு 2053.
ரு மழைக் காலத்தை இழுத்துவந்ததில்
ஏதோ பிசகு ஏற்பட
வெளுத்துக் கட்டிய கண்களோடு
முத்தமிட கன்னம் காட்டுகிறாய்
முத்தத்தின் நன்னெறிகளில்
இது மூன்றாவது காதலியின் முத்தம்
நிபந்தனையற்று
சூடான ஆனியன் தோசைகளுக்கு நடுவே
மல்லாந்து கிடக்கிற என்னை
மிதமான காதலால்
நூறு துயரங்களில் கருணை செய்கிறாய்
இரவின் தொடர்ச்சியாக
வசீகரமான பாடல்களை பாடிக்கொண்டிருக்க
வழிதவறிய தனிமைகளை கொண்டுவர
நெடுநேர மௌனங்களாக
யாரோபோல நெருங்கி வருகிறாய்
கார்முகி
எனக்கு நீ எத்தனை துரோகமிழைத்தாலும்
என் காதலுக்குரியவர் நீமட்டும்தானே
உன்
வாழவைக்கும் காதலுக்கு ஜெ!
விருப்பமான ஒரு நாளை
விருப்பமான பொழுதாய் மாற்ற
விருப்பமானவரின் குரலை எப்படி தொட்டுப்பார்ப்பது.
விரும்பிக் கேட்க
விருப்பமான பாடலை
விருப்பமானவரை பாடச்சொல்லி கேட்பதை தவிர.
விருப்பமானவரின் குரலின் மதுரம்
கரகரப்பின் வாசனை வழிய.. வழிய..
விருப்பங்கள் தளும்ப.. தளும்ப..
விருப்பமானவரும்
விருப்பமான பாடலும்
நீங்களும் மட்டுமே
இந்த பூமியில் இருப்பதாக
நிர்கதியாய் நம்பியபிறகு
சட்டையை பிடித்து இழுத்து
முத்தமிட்டதா உங்கள் குரல்?
ன்னை கலைத்துப்போன
வயலெட் கனவுகள்
பிணக்கின் பேருந்திலேறி
திருப்ப வந்துகொண்டிருக்கிறது.
அது என் தோளில்சாய்ந்து
கைவிட்ட எல்லோரிடமும்
ஒரு தற்கொலை முடிவுகள் பற்றிய
வெற்றிடங்களை நிரப்புவதாக இருக்கிறது.
அது பிரிவின் நியாயங்களை
தந்திரமான நீண்ட இரவுகளின்
நறுமணத் தனிமைகளாக பூசிக்கொள்ள இருக்கிறது.
அது மாறிவிட்ட என் உடல் உருவத்தில்
மனமுடைந்து நகர்ந்துபோன
சில கூச்சங்களை விடுவித்துக்கொள்ள இருக்கிறது.
அது பிடிமானமில்லாத சந்திப்புகளின்
பிந்தைய நூறு சிக்கல்களை
முறிந்த மரங்களாய் மாற்ற இருக்கிறது.
அது ஒரு பழியை
பாழடைந்த கட்டிடம் போல்
எந்த கோரிக்கையில்லாமல் கவனம்பெற இருக்கிறது.
அது யாருக்காகவோ பணயம் வைக்க
ஒரு மலர் உதிர்வதைபோல
குழப்பங்களை தெளிய இருக்கிறது.
அது பாதைகளை தவறவிட்ட பிறகும்
தொலைவுகளின் மாற்றுப்பாதைகளை
பத்திரப்படுத்தி வைப்பதாக இருக்கிறது.
அது  பழைய புகைப்படங்களில்
பதட்டமடைந்த சில பிம்பங்களை
சண்டையிட்டு சாந்தப்படுத்த இருக்கிறது.
அது காமத்தினால் முடிந்த மேகக்கூட்டங்களை
திரும்பத் திரளவைக்க
முடிவுறாத ஒரு கோப்பையை தளும்ப வைக்க இருக்கிறது.
அது கொரானா தடுப்பூசிகளின்
முதல் டோஸ்போல கண்மூடி
என்னை மல்லாத்திவிட இருக்கிறது.
அது துயரத்தின் ஒட்டடைகளை
ஆயிரம் தீப்பொறிகளாக
வயலெட் நிறத்தில் வெடிக்கச்செய்ய இருக்கிறது.
அது இப்படியாக
தனியே நிகழ்ந்துவிடுவதில்லை
என்னை உடைத்து உடைத்து
எழும் பெரும்கடல்
அது என் வயலெட் கடல்.

About the author

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Yuvaraj

ஆகா! Feeling good Gobi

You cannot copy content of this Website