நிறமற்ற கண்ணாடியில் வழிகிறது
அலங்கார விளக்குகளில் இருந்து பிரியும்
பலவர்ண ஒளி
காற்றில் அலையும்
சருகுகளின் சலசலப்பாய்
புன்னகைத்துப் பரவுகிறாய் உயிருக்குள்
உதிர்ந்த இலையின்
சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு வர்ணங்களாகி
பாரமற்று மிதக்கிறாய் கனவில்
சில நேரம் நினைவாக
சில நேரம் கனவாக
சில நேரம் கன்னத்தில் காய்ந்துறைந்த
கண்னீரின் மணித்துளிகளாய்
நவம்பர் குளிர்ந்த| இரவின் நடுக்கமாய்
உனை எப்போதும் உணர்கிறேன்
இப்போதும் உணர்கிறேன்
கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகள்
இப்போதே ஒளிரத்துவங்கிற்று
எதிர்பாராமல் கைதவறிய
கனவின் காயங்களை
கைக்குழந்தையின் ஆடைகளை
திரும்பத் திரும்ப கலைப்பதும்
மறுபடியும் மடித்து
பெட்டியில் நேர்த்தியாக அடுக்கி வைப்பதும் என
ஆறு வருடங்கள் தீர்ந்திற்று
உனது வயதுக் குழந்தைகள்
புதிய வகுப்புக்கு போக தயாராகிறார்கள்
கனவை வரைகிறார்கள்
பேசிப்பேசிக் கொல்கிறார்கள்
உடன் பிறந்தவர்களோடு சண்டைக்கு நிற்கிறார்கள்
ஓவியம் வரைந்து பரிசு வெல்கிறார்கள்
பனிப்பாறையாகி கணக்கிறது நினைவு
இந்த வருடத்தின்
நவம்பர் மாத சிவப்பு நிலவு நீயாகவும்
அதன் கலக்கம் முழுக்க நானாகவும்
இருக்கக்கூடும் என
ஒரு மாறுதலுக்காக நம்பிக்கொண்டிருக்கிறேன்.