மீள் நினைவு
ஏதோவொரு இடம்
ஏதோவொரு புத்தகம்
ஏதோவொரு பாடல்
ஏதோவொரு ஓவியம்
பார்க்கையில் கேட்கையில்
தொடுகையில்
உள்ளுக்குள் உடைப்பெடுத்து
ஆழிப்பேரலையாய்
நினைவுகள் மேலெழுந்து
உடல் குலுங்கி விசும்பலுடன்
விழியோரம் கண்ணீர்
வழிந்தோட
கணத்தில் உறைந்து போய்
நிற்கின்ற தருணத்தில்
அருகிலுப்பவர் ‘என்ன ஆச்சு’
எனப் பதற
‘ஒண்ணுமில்ல, கண்ணுல
தூசி’ என்கிறீர்கள்
கண்களைத் துடைத்துக்
கொண்டே .
தொழில்
கடைசியெனத் தெரிந்தும்
கலந்து கொள்கிறேன்
காந்திக் கணக்கு எனத்
தெரிந்தும் சுழி போடுகிறேன்
சூதாட்டமெனத் தெரிந்தும்
பகடை உருட்டுகிறேன்
குருவிபோலச் சேர்த்ததை
அடிமாட்டு விலைக்கு
அள்ளிக்கொண்டு போவதை
நீரெல்லாம் வற்றிப்போய்
வறண்டு போன விழிகளுடன்
நீண்டநேரம் பார்த்தபடி
வெறுமனே நிற்கிறேன்
மீண்டும் மீண்டும்
முட்டி பெயர்ந்து
ரத்தம் வழியினும்
மண்ணள்ளிப் பூசிக்கொண்டு
பாழாய்ப்போன மனசு
மீண்டும் கேட்கும் அதே கேள்வியை
‘அடுத்தது எப்போ?’