நலம் பெற வீழ்தல்.
கரடாய் கிடந்த உடலில்
தினவும் வேட்கையும்
விளைய
இளகியும் திமிறியும்
கிடக்கும் தேக நிலப்பரப்பில்
இரவு ஒளிர்ந்திட மேயும்
சின்ன சின்ன விலங்குகளின்
காலடிச் சுவடுகள்
கடித்தடங்களில் மகிழ்
தேங்கல்கள்.
காலம் முரடுக் கட்டி
மன இணை இல்லையென்ற
பின்னான இந்நாட்களில்
பால் பேதமற்று போகிறது
முதிர் தனியர்களுக்கு.
இருண்ட அறைகளில்
தனித்த பகல்களில்
உச்சம் வரை போய்
‘சே’ யென சலித்து
கலைந்து வீழ
ஒரு பெரு மிருகத்தின்
வேட்டை
தேவையாகிறது.
பெயர்த்தல்
உன் பெயரை
ஒரே ஒரு மனசிடம் தான்
சொல்லி இருக்கிறேன்.
உனக்கான
கடிதத்தை எழுதி
ஒரே விழிகளுக்குதான்
ஊட்டி இருக்கிறேன்
உனக்கென
இறுதியாய் வாங்கியதை
அவனிடம் தான்
கொடுத்து வைத்திருக்கிறேன்
காலக்கடைசியில்
நான் அற்ற
ஒரு நாளில்
நீ
என்னைக் காண.
வரும் போது
உன்னை
அன்பாய் நடத்தி
உன்னிடம் என்னை
தந்து விடுவான்
அவனுக்கு
நான் தான்
பெயர் வைத்திருக்கிறேன்
உன் வாசமும்
என் வாசமும் கலந்த
புனைப் பெயரை.
பெயர்த்தி.
அவனை பேரன்
என்றும் அழைக்கலாம்.
பேச்சு மடி
இருட்டிடம்
பேசுவது அத்தனை
நிம்மதியாய்
இருக்கிறது.
முகம்
இரண்டாம் பட்சம்.
அகத்தை அலசி
எடுத்துக் கொள்ளச் சொல்லி
பெருகித் தொடுகிறது
ஆறுதல் நதி.
நதியின் மூலம்
தேவதையின்
மார்பாக இருக்கக் கூடும்.
இரா மதிபாலா