cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

சங்கரி சிவகணேசன் கவிதைகள்


வாருங்கள் காதலிக்கலாம் பால் நிலவை.

 

நிலவோடு பேசிக்கொண்டு
மனதோடு சிலிர்த்துக்கொள்ளும்
எல்லா பௌர்ணமி
இரவுகளும்
ரசனை நிறைந்தவைதான்..

வாருங்கள் கொஞ்சம்
காதலிப்போம்
இந்த பனியிரவின்
பால்நிலவை..

அவள் கண்சிமிட்டி சிரித்து
தேன் சிந்த தரும்
பறக்கும் முத்தங்களை
பருகுவதற்காகவேனும்
நீங்கள் என்னுடன்
இரவில் விழித்திருக்க வேண்டும்..

அம்முத்தங்கள்
உங்கள் உதட்டில் வந்து
ஒட்டிக்கொள்ள,
முகில் போர்த்தி
நாணிக் கொள்ளும்
அழகை ரசித்தேனும்
நீங்கள் ஒரு கவிதை
எழுத வேண்டும்..

அப்போதுதான்
நீங்கள்
அவள் மேல்
மையல் கொள்வீர்கள்..

கார்த்திகை மழையில்
குளிக்கும் நிலவைத்
துவட்ட கவிதையால்
ஒரு கம்பளி நெய்ய வேண்டும்..

அவளொளி
அமரும் மலர்களின்
முகங்களில் உங்கள்
ஆஸ்தான கவிஞன் முகம்
காண வேண்டும்..

இலைகளின் துளிகளில்
மின்னும் ஔிக்கீற்று
இசைக் கலைஞனின்
இசைவிரல்களாய் நீள வேண்டும்..

நிசப்த இரவில்
பூ விரியும் ஓசை
ஒரு பாடலாக உங்கள்
செவியில் விழ வேண்டும்..

அந்தப் பாடலின்
பின்னனியில்
சில்லிட்டுக் கிடக்கும்
மனதில்
காலத்தை உறையச் செய்த
சூத்திரத்தை கண்டுபிடித்து
கவிதைகள்
எழுதத் தொடங்கிவிடுங்கள்..

கசியும் ஒளிப்பொட்டின்
தெய்வீகங்களில்
கவிதையின் ஆன்மா
நிலவின் சாயலில்
மிதந்து கொண்டிருக்கும்..

உறுதியாக சொல்கிறேன்
இப்போது
நீங்கள் அவளைக்
காதலிக்கத் தொடங்கிவிட்டீர்கள்..

 

மழையின் பெரும்துயர்.

 

வழிதவறி என் யன்னலில்
வீழ்ந்து கிடந்த
மழைத்துளிகளை தொட்டு
எழுதிய இந்த வரிகளின்
முடிவில்
விரலோடு சிலிர்த்தது
மழைக்கவிதை..

தன்னைப் பிரிந்து
எங்கோ
சென்றுவிட்ட தன் மழலைகளைத்
தேடும் தாயென
மார்பில் அடித்து அலறிப்
பொழிகிறது என் பல்கனியில்..

எப்படி சொல்வேன்
தவறவிட்ட உன்னை விட
என் விரலுக்கு
ஈர்புவிசை அதிகம்,
விரலோடு ஒட்டி
மழைக் கவிதையாகி
முகநூலில்
கண்டவர்.. கடந்தவர்..
விழி பருகி கருத்திட்டவர்..
துளிகளைப் பெருக்கி
நதி செய்தவர்..
நதியை கடலில் சேர்த்தவரென
நீளும் பட்டியலை..

எதுவும் பேசாமல்
கடலின் முகவரியை
கையில் கொடுத்துவிட்டேன்..
அங்கு சென்று
முத்தமிட்டு அணைத்துக்கொள்ளட்டும்..

 

காலமெனும் மந்திரக்கோல்.

 

வின்மீன் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்து
நீள்கனவுக்குள்
உலவிக்கொண்டிருந்தேன்..

கண் முன்னே வரிசையாய்
அணிவகுத்து நிற்கும்
இலையுதிர்கால மரங்களுக்கு
பச்சையம் சமைத்து
பரிமாறிக் கொண்டிருந்தேன்..

கிளைத்தெழுந்த துளிர்களின்
விருட்சக் கனவுகள்
வான் தொடுமென்றே
நீரூற்றினேன்..

கூடிழந்த குருவிகளை
குளிரின் கரங்கள்
சிலைகளாக்கி உறைந்திரக்கும்
கையறுநிலை கண்டு,
கூடமைத்து குடிபுக
அழைப்பு விட்டிருந்தேன்..

நாள் சுழன்று மறுநாள்
ஆவதன்
பிம்பங்களை உருவாக்காமல்
இலைகளில்லா மரங்களினூடு
யன்னலை எட்டிப்பார்த்திருந்தான்,
அவன் கைகளில்தான்
கனவை நனவாக்கும்
மந்திரக்கோல் இருந்தது…

காலமெனும் மந்திரக்கோல்.

 

வாழ்வின் சுவை.

 

நெருக்கமான நேசமாயினும்
நெடுந்துயர் பிரிவாயினும்
ஒரு புன்னகை
தேவையான அறிதல்
கைகுலுக்கும் புரிதல்
பரஸ்பர விலகல் போதும்
வாழ்வைக் கடந்து செல்ல..

வறட்சியான பாலைவனங்களாயினும்
வழிநெடுகிலும் மலர்தூவும்
சோலைவனங்களாயினும்
பயணங்களை எப்போதும்
ஏகாந்தமாய் கடந்து விடவே
நினைப்பதுண்டு..

சில
அன்பின் பிடிமானங்களின்
பற்றுதல் போதும்
இலட்சியங்களை அடைந்துகொள்ள..
சில
அலட்சியங்களை
கடந்துசெல்ல முடிந்துவிடும்
மனநிலையே போதும்
நம்மை நிலை நிறுத்திக்கொள்ள..

முற்றுப்பெறாத இக்கோப்பையை
அன்போ அலட்சியமோ
நீங்கள்
எதைக்கொண்டு நிரப்பினாலும்
அலட்டிக்கொள்வதேயில்லை..
வடிகட்டி கொள்வதுண்டு..

எனக்கான நாட்களில்
முடிவடைந்த பாதியிலும்
நாளைக்காக தொடரும்
மீதியிலும்
குழப்பங்கள் ஏதுமில்லை..
நகர்தலின் அர்த்தம்
புரிந்து போனதில்..
வாழ்வின் சுவை
இனித்துக்கிடக்கிறது.


 

About the author

சங்கரி சிவகணேசன்

சங்கரி சிவகணேசன்

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள புத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
'உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் பெண்களின் மனவோட்டத்தை கவிதைகளாய் கூறும் "அரூப நிழல்கள்" எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website