கம்பளிப்புழு பருவம் மரபணுவில் பதிந்து தரும்
வெம்மையோ!!
சிறகு முளைத்த பின்னும்
சிறு சறுக்கலுக்கும்
குறுக்கிக் கொள்ள
வட்டம் தேடித் தேடி
சுருக்கிட்டுக் கொள்கிறது
ஏதோ ஒரு விட்டத்தில்..
பிரார்த்தனை கூடத்தில்
ஜெபத்தின் முடிவில்
கூறிக் கொள்கிறோம் ஒருவருக்கொருவர்
சமாதானம்!!
பிறர் கூறும் சமாதானம்
பிறரை ஏற்றுக் கொள்வதற்கு!!
என்றாவது நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்கிறோமா!!
நம்மை ஏற்றுக் கொள்ள பிறரிடம் காரணம் காரியம் விளக்கி விடுகிறோம்!
நமக்குள் நாமே விலங்கிடாமல் இருக்கின்றோமா!!
சரியோ தவறோ
கவலையோ களிப்போ
நமக்குள் நாம் கூறித்தான் பார்ப்போமா ஒரு சமாதானம்!!
மாற்ற முடியாததை ஏற்று
மறக்க முடியாததை மன்னித்து
நம் சுயத்திற்கு நாம் தரும்
ஆகச் சிறந்த தானம்
சமாதானம்!!