cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. நிகழ்கலை

நாற்சந்தியில் காலடி மண் எடுத்து
உப்பு, வற்றல், சூடத்தைச்
சேர்த்துக் கட்டி

அவ்வளவு அழகில்லை என்றாலும்
‘ஊரில் உள்ள கண் எல்லாம்
உன் மேல்தான் இருக்கிறது’
என்று சொல்லி
வெள்ளிக்கிழமை தோறும்
பொட்டலத்தை மூன்று முறை
தலையைச் சுற்றி
ஒவ்வொரு சுற்று முடியும் போதும்
நன்றாக துப்பவும் சொல்லி
அம்மா திருஷ்டி கழிப்பது என்பது

‘காக்கைக்கும் தன்குஞ்சு
பொன்குஞ்சு’
என்ற சொலவடை
நிகழ்கலை ஆகும் தருணம்.

2. வேர்

 

பூக்களைத் தாங்கும் போது
மட்டும் அல்ல
கனிகளைத் தாங்கும் போதும்
கிளைகளுக்கு வலிப்பதில்லை

பறவையின் கூடு
மரத்தில் ஒரு வீடாக தோன்ற
தேன்கூடு மட்டும்
இனிக்கும் கனியாகவே தோன்றுகிறது

கீழே விழுந்த
பூவில் ஒட்டிய மண்ணையும்
கனியில் ஒட்டிய மண்ணையும்
ஊதி ஊதி துடைக்கிறோம்

கீழே விழுந்து சருகாகி
மண்ணுக்கு உரமாகும்
இலைகளைத் தான்
யாரும் கண்டுகொள்வதில்லை

காற்றுக்கு ஆடும்
கிளையின் ஆனந்தத்தை
பறவை பறந்து சென்ற பின்
ஆடும் கிளையிடம்
காண முடியாது

கிளைகளின் ஆட்டத்தை
வேர்
ஆடிப்பார்க்க ஆசைப்பட்டால் கூட
மரம் தாங்காது.

3. சிணுங்கும் நட்சத்திரங்கள்

 

நிறைய முத்துக்கள் வைத்த
கொலுசுகளை அணிவது தான்
அவளுக்கு விருப்பம்

நாளாக நாளாக
நடந்து நடந்து
முத்துக்கள் எல்லாம்
உதிர்ந்த இடம் தெரியாமல்
காணாமல் போய்விடும்
காற்று மகரந்தங்களைச்
சுமந்து சென்று
சேர்த்த இடங்களைக்
கணக்கில் வைத்துக் கொள்வதில்லை

சேலை விளிம்பைக் கொலுசு
பிடித்து இழுக்கும் போது
அவளுக்கு வருகிறது
ஒற்றை ஜடையைச் செல்லமாக
பிடித்து இழுக்கும்
அத்தானின் ஞாபகம்

அவளைப் பொருத்தவரை
முத்துக்கள் இல்லாத கொலுசுகள்
பேசத் தெரியாத ஊமைகள்
நதியைப் போல் சலசலக்காமல்
கடலைப் போல
அலையோசையும் இல்லாமல்
தேங்கிக் கிடக்கும் குட்டைகள்

மொத்தத்தில்
அல்லிரவில் சிணுங்காத
நட்சத்திரங்கள்.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website