நீரென்றால் பாட்டில்
நிலமென்றால் ஃபிளாட் என்று
புரிந்துகொள்ளப் பழகிவிட்ட தலைமுறைக்கு.
துருப்பிடித்த மிகப்பழைய
காலங்களின் கதைகள்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஒருபோதும்.
அனகோண்டா போல
கொழுத்துக்கொண்டே போகும் பெருநகரம்
வானத்தைத் தீண்ட
மால்களைப் பழக்கும்போது
காலடி நிலமும் களவுபோனவர்கள்
பாலங்களுக்கடியில் குடியேறுகிறார்கள்.
உள்ளங்கையில் உலகம் என்று
சொல்லிப்பழகும் காலத்தில்
நிழலுமற்றுப் போனவர்கள்
அதன்
நினைவுமற்றுப் போனார்கள்.
நீளமாக எழுதுவது வழக்கொழிந்த வடிவம் இங்கு
யாருக்கும் நேரமில்லை என்பவர்கள்
பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
கண்ணீரில் துருப்பிடித்த காலமோ
சொல்லிச்சொல்லிப் போகிறது
சொன்னதையே
கேட்கச் செவிகளற்ற வெளியிலும் .