காலச்செவிலி
கண்களற்ற ஆகாயத்தில்
எத்தனையோ மின்னல்களின்
சிமிட்டல்களில்
முனகல் புரியும் மேகங்களின் சம்பாஷணை மழையினைப்
பொழிவிக்கிறது
விசும்பு முழுக்க
உலாவரும் கால்களால்
புலர்ந்தும் அலர்ந்தும்
பொழுதுகள்
‘ஷிப்ட்’ மாறியபடியே
பணிபுரியும் இருவரும்
வீட்டிற்கு ஒன்றாக
வருகை புரிகையில்
மடிவிரித்து சந்திப்பொன்றை
நிகழ்த்துகிறது
அந்திநேரத்து தொட்டிலில்
காலமெனும் செவிலித்தாய்.
காலத்தின் கை
அசைவின்றியிருந்த
குளத்தை சலனப்படுத்தாது மிதக்கிறது சருகு
சஞ்சலமொன்றை
நிகழ்த்தும் அதிருப்தியில்
மூழ்குகிறது மழைத்துளி
மேனி கிழிந்தாலும்
ஊடோடித் தையலிடுகிறது
காலத்தின் கை
வெற்றுக்குளத்தில்
நிரம்பியிருக்கிறது சொட்டு
வீழாத கானல்
அசைந்தாலும் அசைவின்றிக் கிடந்தாலும் குளமென்றே
அழைக்கப்படுகிறது குளம்!
போதியின் நுனி
வெட்டுப்பட்ட
அரசமரத்தின் தலையில்
நிறைந்தொழுகுகிறது
வெய்யில்
வெற்றுப்
பெருமரமொன்றின்
வேரில் உயிரைப்
பிடித்துவைத்துள்ளது
வெப்பம்
முட்டும் வெயிலிற்கேற்ப
புயலையோ
கொட்டும் மழைக்கேற்ப
தென்றலையோ
பதிலிட முடியாத
துயரத்தில்
மர முண்டம்
புத்தர் சிலைக்காக
அறுத்தது போக
எஞ்சியிருந்த தடிமனின்
ஞானம் பிளந்த
தூரிலிருந்து துளிர்விட்டு
எட்டிப்பார்க்கிறது
போதி மரத்தின்
நுனியொன்று!