இதழ்களைச் சுவைப்பவன்
நெடிதாக வளர்ந்துவிட்ட
பசுமை விளிம்பில்
பகற்சூரியனாய் உந்தன் தோற்றம்..
ரேகைகள் விதைத்த
உந்தன் இலைகளின் பார்வையை
எனை நோக்கித் திருப்புகிறாய்..
மகரந்த விழிகளைச் சுற்றிலும்
ஊதா வண்ண இதழ்களை
நிரல்பட அடுக்கி வைத்துள்ளாய்..
அதன் நீண்ட சொற்களில்
எனக்கான கவிதை வடிக்கிறாய்..
சில கவிதைகள் ஏனோ
அதில் இடைமறித்தோடுகின்றன..
காற்றை வருடுகின்றது
உந்தன் மணம்..
தோட்டத்தில்
தனித்து நிற்கும் நின்னிடம்
மண்டியிடுகின்றது
எந்தன் மனம்..
பூக்களை ரசிக்கும் மாயவன் நான்..
தவழும் மரம்
மரத்தின் உள்நுழைந்து
பட்டைகளை உடுத்திக் கொள்ளும்
பெரும்பட்சி நான்..
எட்டுக்கால் சிலந்தியாய்
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
மையத்தில் கட்டுகிறேன்
கோட்டை ஒன்றை..
பசுமையின் வாசத்தை
துளையிட்டு உறிஞ்சிக் கொள்கிறேன்
படர்கிறது பச்சை ஒளி
என் மேனியெங்கும்…
காட்டை மணிமணியாகக்
கோர்த்து என் கோட்டைக்குள்
அடுக்குகிறேன்..
மரங்கள் தவழ்ந்து
கொண்டிருக்கின்றன
எந்தன் அத்துவான காட்டில்..