எல்.கே.ஜி நேரு பசியால் அழுதுக்கொண்டிருக்க
யு. கே.ஜி இந்திராகாந்தி பிஸ்கெட் எடுத்துக்கொடுத்தார்
காந்திஜி தன் கண்ணாடியைக் கடித்துக்கொண்டிருந்தார்
ஜான்சிராணி கடிக்கக்கூடாது என தனது அட்டை வாளால் கண்டித்தார்
வ.உ.சி குட்டிக்கப்பல் வைத்து டுர்.. டுர் என்று ஓட்டிக்கொண்டிருக்க
கட்டபொம்மன் அதை தடுத்து நிறுத்தினார்
பாரதியார் ஓடி ஓடி விளையாடிக்கொண்டிருந்தார்
துரத்திப் பிடித்த ஒன்றாம் வகுப்பு மிஸ்
வாயில் ஒற்றைவிரல் வைத்து கப் சிப் என்றார்
பாரதியும் கைகள் கட்டி வாய் மூடினார்
எழுபத்தைந்து ஆண்டுகள் வயதை எட்டிய இந்திய ஒருமைப்பாடு
சுதந்திர தின விழா மேடைக்குப் பின்னால்தான்
உண்மையில் அரங்கேறிக்கொண்டிருந்தது.
உனது சுருக்கென்ற சொல் முள்ளால்
உதட்டின் ஓரமாக எட்டிப்பார்க்கும் புன்னகையை
முதலில் பிடுங்கி எறிந்துவிட்டாய்
உன்னால் ரசிக்கப்படாத
சின்ன சின்ன அழகான விஷயங்களை
நானும் ரசிக்காமல் இருக்க கற்றுக்கொள்கிறேன்
குட்டிக்குட்டி கொஞ்சல்கள் கூட
நீ சட்டை செய்யாததால்
உன்னை ஒரு மரக்கட்டையைப் போல
கடக்கப் பழகி இருக்கிறேன்
அழகாக இருக்கிறாய்
அற்புதமாக சமைக்கிறாய்
இந்த புடவை உனக்கு நன்றாக இருக்கிறது
இந்த கலர் உனக்கு எடுப்பாக இருக்கிறது
இப்படி எதுவும் கூறாத உன்னை
இந்த கட்டுக்குள் அடங்காதவர் என சொல்லி சொல்லி
ஊராருக்கு உத்தமன் ஆக்குகிறேன்
எனக்கு பிடித்த பாடல்கள்
உனக்கு கூக்குரல்
பிடித்த கவிதைகள்
உனக்கு உளரல்கள்
பிடித்த நடிகனின் படத்தை
மாற்றிவிடும் பழக்கம் உன்னிடத்தில் உண்டு
எல்லாவற்றையும்
கண்களை மூடி
கோபம் அடக்கி
வந்த வார்த்தைகளை மௌனித்து
சிரித்தபடியே
மதிய உணவைப் பரிமாறும் எனக்கு
‘குடும்பக்குத்துவிளக்கு’ பட்டத்திற்கு நீ பரிந்துரை செய்வாய்தானே ?!
– மிஸஸ் குமாரின் டைரிக்குறிப்பு –
ஒரு முத்தத்தை தூக்கி வரும்போதெல்லாம்
வலிகளை சுமந்த முகத்தை வைத்துக்கொள்கிறாய்
அணைப்பை நீட்டுகையில்
இதுவரை நெருப்பில் நின்று வந்ததுபோல நடந்துகொள்கிறாய்
கவிதையை சுமந்து வரும்போது
கண்களை மூடிக்கொள்கிறாய்
பாடலை ஏந்தி வருகையில்
காதுகளை இறுக்கப்
பொத்திக்கொள்கிறாய்
ஒரு நேரத்தில் நீ பூச்செண்டுகளை சுமந்து வந்திருந்தாய்
நான் பட்டாம்பூச்சி ஆனதற்காக என்பதை
நீ மறந்தே விட்டாய்
நான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
மெஸெஞ்சரில் குறுஞ்செய்தி அனுப்புகிறான் இராவணன்
ஐ லவ் யூ சீதா என்பதுடன் சில உம்மாக்களையும் சேர்த்து.
மறுகணமே அவனை ப்ளாக் செய்கிறாள்.
கோபம் கொண்ட அவனோ பத்து ஃபேக் ஐடிக்களில் வந்து
சீதையின் செல்பீக்களை பதிவேற்றம் செய்து
ஓயாது தொந்தரவு செய்கிறான்.
சில ஸ்கிரீன்ஷாட் குறுஞ்செய்திகளை
இராமனுக்கே ஷேரும் செய்து புலம்புகிறாள் சீதை.
சமூக வலைத்தளங்களில்
இனி சுயமி பதிவேற்றம் வேண்டாம் என்று
அறிவுரை பகர்கிறான் இராமன்.
நவீன சீதை தீயிலா குளிக்க முடியும்
முகநூல் கணக்கை டீஆக்டிவேட்தான் செய்ய முடியும்.
பத்து வருடங்களாக குழந்தை பேரிலாத
ராதையும் கண்ணனும் பெர்டிலிட்டி சென்டர்க்கு சிகிச்சைக்கு சென்றனர்.
இருவரது காதலின் நீள அகலங்கள் ஆராயப்பட்டு
மாதம் 5000 ரூபாய்க்கு மருந்துகளும்
புணர்தலுக்கு முன்
புணர்தலுக்குப்பின் என
சிகிச்சையின் சாஸ்திரங்களும் எழுதப்பட்டன மருந்துச்சீட்டில்.
மாதத்தின் இறுதியில் வந்த மாதவிடாயில் உடைந்துபோன
ராதா இப்போதெல்லாம்
இசையை கேட்பதுமில்லை
கண்ணனும் குழலிசையை வாசிப்பதுமில்லை.
கிருஷ்ண ஜெயந்திக்கு வீடுகள்தோறும்
குழந்தையின் பாதங்கள் வைத்து வரையப்பட்ட
அதே கிருஷ்ணனின் பாதங்கள்
அடுத்தமாத சிகிச்சைக்காக
பெர்டிலிட்டி சென்டர் நோக்கி மீண்டும் பயணித்துக்கொண்டிருந்தன.
satire தொணி இருக்கிறது.