பட்டாம்பூச்சி ஒன்றை
வரைந்து
வண்ணம்
தீட்டி மகிழ்கிறாள் பொம்மி
பொம்மையின்
மனம் முழுவதும்
ஏழு வண்ணங்களாக
மின்னுகிறது
மழை நேரத்து வானவில் ஓவியம்.
யானை மீதேறி
சவாரி செய்ய
ஆசைப்படுகிறது குழந்தை
நான்
யானையாக மாறி
முதுகை நீட்டி
சிறிது தூரம்
பாரம் சுமக்கிறேன்
தூரத்திலிருந்து
பிளிரியவாறே
ஓடி வருகிறது
குட்டி யானையொன்று
வழியெங்கும்
இறந்து கிடக்கிறது
யானையின் வாழிடங்கள்.
மாலை
நேர வகுப்பறைக்காக
ஆற்றை கடந்து பள்ளிக்குள் நுழைகிறாள் அறிவு
வகுப்பறையெங்கும் நீந்திக் கிடக்கிறது
இரு கரையையும்
மூழ்கடித்தவாறு
சென்ற தண்ணீரின் ஓசைகள்.
விடிந்தால் தீபாவளி
பக்கத்து
வீட்டு சுவரெல்லாம்
வண்ணம்
பூசியவாயிற்று
அவ்வீட்டு
குழந்தைகளுக்கு
புது ஆடை வாங்கியாயிற்று
வெடித்து சிதறும்
பட்டாசுகள் வீடு
வந்து சேர்ந்தாயிற்று
கனவிலிருந்து
வெளியேற
முடியாமலே அழுது கொண்டிருக்கிறேன்
தைக்க கொடுத்த
பழைய சட்டை துணியை தைக்கப்படாமலே
கிடப்பில் போடப்பட்டிருக்கும் தையல்காரனனான அண்ணனிடம்
கைகையிலிருக்கும்
குத்தூசியை போல.