கொல்லைப்புறத்தில்
செத்துக்கிடந்த அப்பனை
தூக்கி வந்து முற்றத்தில் கிடத்திவிட்டு
அடுப்பாங்கரை நட்டத்தில்
அவசரமாக குழித்தோண்டி புதைக்கிறேன் அழுதுகொண்டே
பால்டாயில் டப்பாவையும், சாராயப்பாட்டிலையும்….
கதிரருவாள் போல
கன்னத்தில் படர்ந்திருக்கும்
காதோர சுருண்டமுடி
தேசியகொடி போல்
நெற்றியில் தீட்டப்பட்டிருக்கும்
கலர் பொட்டுகள்
பனம்பழம் போல்
மார்பில் உருண்டுக்கொண்டிருக்கும்
முலைக்காம்புகள்
மல்லிகை பூ போல்
கக்கத்தின் வாசனைபரவியிருக்கும்
வேர்வைத்துளிகள்
தேய்பிறை போல்
வளைந்து சுழித்து புன்னகைக்கும்
செவ்விதழ் அதரம்
அத்தனையும் உன்னிலும்
அவளின் சாயல் நீ….
செத்துபிழைத்தவர்கள்
அரக்கபறக்க
அலுவல் பணிக்கு
அணிகத்துடன் வேகமெடுக்கையில்
அனிச்சை தும்மலிலும்,
அறிமுகமாகும் மாந்தர்களின் வினாவுதலிலும்
ஓர்மையில் வாழ்ந்துபோகிறார்கள்
ஆலத்தில் மாய்ந்துபோன அம்மாவும், அப்பாவும்.