cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

செல்வசங்கரன் கவிதைகள்

  • மத்தியான நதி

 

வேறெங்கோ போய்க்கொண்டிருந்த எனக்கு 

மத்தியானத்தை நோக்கி போவது போலே இருந்தது

மத்தியானத்திலிருந்து திரும்பி வண்டியை விடலாமென நினைத்தால் 

திரும்பவும் மத்தியானத்திலேயே வந்து நின்றேன்.

வழியெங்கிலும் சாலையில் மத்தியானம் எழுப்பியிருந்த

பெரிய பெரிய சுவர்கள்

எல்லாம் மிருதுவானவைகள் என்பதால் 

அந்தச் சுவர்களை ஏறிக் கடக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

கிடைமட்டமான பாதையைக் கடப்பது போலே கடந்தேன்

மஞ்சள் என்று சொல்லிக்கொண்டு யோக்கியன் மாதிரி

வழி நெடுகிலும் நன்றாக நடித்துக்கொண்டும் வந்தது

இன்னும் எத்தனை ஊர்களை இப்படி விலைக்கு வாங்கியுள்ளதோ 

இன்னும் எத்தனை பேர்கள் மத்தியான நதியில் குளித்து

வெளியேறிக் கொண்டிருக்கிறார்களோ

பாரம் தாங்க முடியாது .

என் தலையை அழுத்திப் பிடித்திருந்த மத்தியானத்தை எடுத்து

ஒரு தொப்பியை வீசுவது போல வீசினேன்

தொப்பியை எடுத்த மாதிரியும் இல்லை

அது கீழே விழுந்த மாதிரியுமில்லை தொப்பியே அங்கில்லை

பிறகு இந்த இடத்தில் இப்பொழுது 

ஒரு தொப்பி என்ன செய்துகொண்டிருக்கிறது

 


 

  • சத்தங்களின் பாதை

 

அருகில் ஏகப்பட்ட சத்தங்கள் 

எல்லாவற்றையும் எங்கு வைப்பதென தெரியவில்லை

கை மறதியாய் எங்கும் வைத்துவிடக் கூடாதென

தரையில் ஒரு குழியைத் தோண்டி பத்திரப்படுத்தினேன்

அதுகள் அங்கே இருக்க மாட்டேனென 

அதுகளாகவே நடுவானைத் தோண்டி 

அதுகளாகவே உள்ளே போய் இருந்து கொண்டன

தேவைப்பட்டால் எங்களை நீங்கள்

நிலத்திலேயும் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றதும்

எனக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளுகிற குழப்பம் 

பின்பு அதுகளாகவே 

சாயங்காலத்திற்கு மேலென்றால் கரிய வானம் தன்னைக் 

கரிய சாலையாக நினைத்துக் கொள்ளும் என்கிற

உண்மையை போட்டுடைத்தன

அப்படியே போட்டுடைத்துக் கொண்டே 

என் தலை முடியை பாந்தமாக நட்டு நட்டு கொடுத்தன

ஒரு தலை முடியை நட்டுகிற சத்தம் இதுவரைக்கும் நான் கேட்காத ஒன்று.


  • செல்வசங்கரன் 

Art Courtesy : Paolo De Leon . behance.net


About the author

செல்வ சங்கரன்

செல்வ சங்கரன்

செல்வசங்கரன் ( பி. 1981 ). விருதுநகரில் வசித்து வருகிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணி. 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022) ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website