cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

ஈஸ்டர் ராஜ் கவிதைகள்


மடி தூக்கி எழும் கை

மடி தூக்கி எழும் கைகளில்
பூமி இன்னும் ஆவலோடு சுழல்கிறது
அந்தக் கைகளில் ஆனந்தத்தோடு தவழ்கிறது
இறைவனின் பாடல்
இறைவனின் கருணை
கால்கள் வரையாத பாதச்சுவட்டை
இதயத்தில் பதித்தன கைகள்
ஓராயிரம் கைகள் செய்ய முடியாத ஒரு செயலை
எந்த ஒரு நிபந்தனையும் இன்றி
செய்து காட்டின இரண்டு கைகள்
அந்த இரு கைகள் காவல் நிலையம் வரை
அதற்காகச் செல்ல வேண்டியிருந்தது
இருந்த போதும் அந்தக் கைகள்
மிச்சம் வைத்து மிச்சம் வைத்துச் சுழல்கிறது
ஓர் அன்பை
ஓர் அதிர்வை.

தறிகெட்டு திரியும் வெள்ளாடு

அவன் நாவில் நான்
ஒரு தேன் சொட்டை வைத்தேன்
பதிலுக்கு
அவன் என் நாவில்
கூடுதலாக இரண்டு தேன் சொட்டை வைத்தான்
ஒரு கிளை ஆடும் போது
ஒரு நதியில் இருந்து எவ்வளவு குளிர்ச்சி புறப்பட்டு வருமோ
அவ்வளவு குளிர்ச்சி அவன் பால் வெளியில்
புரண்டோடி வருகிறது
பசித்த வயிற்றுக்கு ஒரு மதுரமான கொய்யாப்பழத்தை
உண்ண அவன் மனமாரக் கொடுப்பது
தோழமை என்ற உணர்வால் வந்தது
வா நண்பா உன் தோழமை எனக்கு வேண்டும்
மானுட விடுதலையில் அக்கறை கொண்ட நீ
என் பாடசாலையில் நிரந்தர உபாசகனாக வேண்டும்
தறிகெட்டுத் திரியும் ஒரு வெள்ளாட்டை
உன் தோள் மீது தூக்கி வா நண்பா !

முத்தத்தில் மீதம் இருக்கும் வாழ்வு.

அதிகாலைப் பொழுது சின்னதாக ஒரு முத்தம் வைத்து
அன்றைய நாளுக்குள் நுழைந்தேன்
அன்றைய நாள் எனக்குப் பெரிய பெரிய முத்தங்களைக் கொடுத்தது
கடல் பெரிய பெரிய ஆழி நீரின் அலையை
நெஞ்சில் வீசி வீசி எறிகிறது
சின்னதும் பெரிதுமான மீன் குஞ்சுகள்
உள்ளங்கையில் கிடைத்தன
அன்று சிப்பிகளையும் வலம்புரிச் சங்கையும்
கையில் எடுத்த மகிழ்ச்சி
மின்சார ஓட்டம் கையில் இருந்து தாவி
கண்ணுக்குள் தீப்போல் புகுகிறது
அடைமழையில் நனைந்த சுகத்தோடு வீடு செல்கிறேன்
பாரமான இதயம் ஓர் உப்புக் கல்லாக கரைவதை
அன்றுதான் உணர்ந்தேன்
சொர்க்கத்தின் மகிழ்ச்சி வேறு எங்கும் இல்லை
அன்றைய நாளின் முத்தத்தில் மீதம் இருக்கிறது.

குருதிப்பூ

ஒரு பூ என்னை மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது
அதன் சிகரத்தில் இருந்து பூமியைப் பார்க்க
இந்த உலகமே பூக்களால் மூடி கிடந்தது
அதன் வனப்பை வாயால் சொல்ல இயலாது
கண்களாலும் தீட்ட முடியாது
பூவின் நறுமணத்தால் தலை சுற்றிக் கீழே விழுந்தேன்
பகலும் இரவும் அப்படியே இருந்தது
சூரியன் மிதமான சூட்டால் கண்ணைத் திறக்க
நான் மயக்கத்தில் இருந்து விடுபடலானேன்
இந்த அகண்ட பூமியைக் கண்களால் விரிய விரியப் பார்க்கிறேன்
பார்த்த இடங்களில் எல்லாம் பூக்கள் இல்லை
ஒரே ரத்த சிவப்பு !

About the author

அ.ஈஸ்டர் ராஜ்

அ.ஈஸ்டர் ராஜ்

அ.ஈஸ்டர் ராஜ் என்னும் இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். காலச்சுவடு, உயிர்மெய்,, புதிய கோடங்கி, தாமரை, கல்கி, அரும்பு போன்ற இதழ்களில் இவர்தம் கவிதைகள் வெளிவந்துள்ளன. இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றும் கவிதை குறித்து மாணவர்களிடம் உரையாற்றியுள்ளார். குறிப்பாக இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போர்க்காலச் சூழல் என்ற தலைப்பில் பி.ஏ.ஆனர்ஸ் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். 2002ல் பொதிகைத் தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்னும் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இவர்தம் கவிதைகள் ஒளிபரப்பப்பட்டன. கோடைப் பண்பலையில் கதவைத் தட்டும் கற்பனைப் பகுதியில் சங்கக் கவிஞர்களைக் குறித்து இவர் எழுதி அனுப்பியதை அவர்கள் ஒலிபரப்பு செய்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை மயிலாப்பூரில் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய கலை இரவு நிகழ்ச்சியில் இவரது கவிதை முதல் பரிசைப் பெற்றது. சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களிடம் நவீன கவிதைகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் உரை நிகழ்த்தி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website