அதோ பாருங்கள்….
அங்கொரு பெரிய இருட்டு அமர்ந்திருக்கிறது
அதைச் சுற்றி சின்ன சின்ன
இருட்டுகளும் அமர்ந்திருந்தன
கொஞ்சம் தள்ளி பலப்பல உடல்கள்
நின்றுக் கொண்டிருந்தன.
திடீரென்று இருட்டு நகர ஆரம்பித்தது
உடல்களும் நகர்ந்தது
அது ஒரு விழாக்காலக் கூடுகை போலக்
காட்சிப்படுத்திக் கொண்டது
ஆனால், உண்மை அதுவல்ல.
உடல்களின் அவத்தையென்பது
மிகவும் கலங்குதலுக்குரியது.
பேரணி போல் நீண்ட வரிசையில்
உத்தராயண பொழுதாய்
நிற்க வேண்டும்
ஆனால், பாருங்கள்
இருட்டுகள் அமர்ந்துக் கொண்டு தன் அரைவாய் திறந்து
சில சம்பிரதாய விளக்கத்தைக் கடித்துத் துப்பின
அதைக் கேட்டு உடல்கள் கசங்கிக் கிடந்தன.
சில நேரம் காதடைப்பும் செய்து கொண்டு
எதிர் சம்பாவணையும் காட்டாமலிருந்தன.
நடுக்கத்தோடு சில உடல்கள்
முகம் காட்ட மறுத்து அலை பாய்ந்ததில்
இருட்டுகளுக்குப் பகடி தோன்றியது
அதன் கையில் சாட்டை போல
ஏதோ ஒன்று நெளிந்தது.
அதற்கு எலும்புகள் கூத்தாட வேண்டும்
பண் பாட வேண்டும்.
இப்பொழுது குழைந்துத் திரண்ட சதைகள்
உடலை விட்டு நீங்கி சுவாசிக்கக் காத்திருந்தன.
நஞ்சுக் கொடிகளின் இறுக்கலில்
கத்தக் கூட முடியவில்லை.
இருட்டுகளின்
கொள்ளிக் கண்களால்
நகர முடியா உடல்கள்
சன்னமாய் சற்றே
வெளியே வர ஆரம்பித்தன
எம் பாணன்
எங்கோ பாடத் துவங்கிவிட்டான்
அடைப்பட்டக் குரல்களில்
சீவன்களின் மெல்லிய நரம்புகளை
மெலிதாக நீவி இசைத்தான்
கண்திறந்த அதகளத்தி
கடைத்தேற்றத்திற்காகத்
தன்னைத் திருப்பினாள்
இப்பொழுது, இருட்டு
பல வண்ணங்களாய் மினுங்கும்
உடல்களாகி நகர்ந்தது.
ம.கண்ணம்மாள்