cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

தேவசீமா கவிதைகள்


கம்பளி கண்டொன்று

 

எதுவோ மெத்தென
தட்டுப்படுகிறது
படுக்கையில்.
 
மெத்தென்ற பொருட்களின்
கலவை தானே 
அது.
 
பின்னெதற்கு மனசு 
திக்கென்கிறது.
 
இதுவரை தெரிந்தும் 
உணரா ஒன்று 
புதிதாய், உருண்டையாய்
குட்டிப்பூனை, நாய்க்குட்டி
ஒன்று  போல
ரஜாய்க்குள் 
தட்டுப்படுகிறது.
 
பதற வைத்து, 
உதறிடச் செய்து,  
பயமுறுத்தி, 
தெரிந்த பின் ஆசுவாசமாகி, கேலியான பின்,  
மெல்ல மெல்ல 
சகஜமான ஒரு நாளில்
தன்னில் 
திசைகாட்டும் 
காந்தமானது படுக்கை.

 

இடர் அடக்கல் இசக்கிக்கும் சாத்தியமில்லை.

 

கூட்டத்தினை 
விழாக் கூடத்தினை
கண்களால்  துழாவிப் 
பின் அலசி ஆராய்ந்து
ஆண்களைத் தவிர்த்து
சக பெண்களை
அவர்களின் இருப்பை
நிச்சயப்படுத்திக் கொண்டு 
சீக்கிரம் வந்திருந்தால் 
எங்கே தான் இருக்கிறது 
எனக் கலந்திருக்கலாமோ 
என்றெல்லாம் யோசித்து
உயர்ந்தோர் என்றாலும் 
ஆண்களைத் திரும்பவும் 
தவிர்த்துத் தவிர்த்துத்
தோதான 
பணி செய்யும் 
பெண்கள் யாரும்
இல்லையென்றான பின்னே
பர பரவெனப்
பம்பரமாய்ச் சுழலும் 
கனிவு கண்களில் மின்னும் 
நயமான
ஒரு ஆணிடத்தில்
சத்தம் எழாதவாறு 
மெதுவே கேட்கிறாள் 
இசக்கி.
 
‘ஓய்வறை’ எங்கிருக்கிறது ?
 
வழி கேட்டுப் பின்
கண்டுபிடித்து 
கழிப்பறை பீங்கானில்
 அவசரமாய்க் குத்த வைக்கையில்
வெட்டவெளியில் 
‘ஒன்றுக்கி’ருப்பதைப் போலவே இருக்கிறதாம்
அவளுக்கும்.

மீச்சிறு…. மீப்பெரு

 

மௌனம் விலகல்
மௌனம் வலி
மௌனம் புறக்கணிப்பு
மௌனம் பதில்
ஏக்கத்தினை உள்வைத்துப் பூட்டும் 
அலமாரி
விசாரணைகளின் எதிர் ஒலி
ஞானக் குகை வாயிற் சாவி
பேரோசைகளை உள்கொண்ட மிக மெல்லிய படுதா
மௌனம் செவ்வியல்
மௌனம் யாருமற்ற ஏதுமற்ற வெற்றிடம்
நிரப்பிக் கொள்ள 
வசதியான பீங்கான் ஜாடி
மௌனம் மொழிபுறா மொழி.

 

About the author

தேவசீமா

தேவசீமா

குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

You cannot copy content of this Website