cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

அடிமைக்காளியின் அழகிய பெயர் குடும்பத் தலைவி


சொற்தீ மூட்டி
தலைவனை எரித்துவிட்டு,
மீறும் சாம்பலைத்
தன் நெற்றியில் பூசிக்கொண்டு ஆடி,
தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள்,
ஊடல் கொண்ட அடிமைக்காளி.

சுக்கு நூறாய்
உடைந்து விழும் தொலைஇயக்கியில் [remote] அடிமைக்காளியின்
தற்காலிக விடுதலை பரவுகிறது.

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து
ஊடலை ஆற்றுப்படுத்த
வழியறியாத் தலைவனுக்கு,
வக்கற்றவன் எனப் பெயர் சூட்டி அடங்குகிறாள்
அடிமைக்காளி.

தான் சரியில்லையென்று
மனநல மருத்துவரைச் சந்தித்து,
தலைவனின் இயலாமை மாத்திரைகளை
விழுங்கி மறைக்கிறாள்
அடிமைக்காளி.

அடிமைக்காளியின் கண்களில்
கண்ணீர்த் தொழிற்சாலை,
உணரும் தலைவனின் கண்களில்
வைராக்கிய மின்னல்.

வெளியில் கேட்டுவிடக் கூடாதென்று
கதவைச் சாத்தி ஊடல் கொள்ளும்
அடிமைக்காளியின் பண்பில்,
கூடலின் கருஉயிர் கசிகிறது,
என்று கவிதை எழுதுகிறான் தலைவன்

தெய்வமே
எனக் கைகூப்பித் தொழுகிறான்
தலைவன்,
வானில் நிலவாகி குளிர்விக்கிறாள்
அடிமைக்காளி.

ஊடலின் தேவையை
உணர்த்துகிறது
வியர்வைத்துளிகளின்
இனிப்புச்சுவை.
அடிமைக்காளி உச்சம் கொள்கிறாள்.

வீட்டுக் கூண்டுக்குள்
அடிமைக்காளியின் ஆட்டம்,
அவள் முன் தலைவனின் பணிவு
ஓர் ஏமாற்றுப் பழம்.

மீசை முறுக்கும் தலைவனைப் பார்த்து
வெற்றிப் புன்னகை சிந்துகிறாள்
நீள்மயிர்க்குடுமி தரித்த அடிமைக்காளி.


பாக்கியராஜ் கோதை

About the author

பாக்கியராஜ் கோதை

பாக்கியராஜ் கோதை

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Nalayini Murugesh Kumar

Wonderful lines… please keep posting….

You cannot copy content of this Website