தாயுமானத் தோழி
அந்த சாலையோரக்கடையில்
தழும்பி நிரம்பிய தேநீர் கண்ணாடிக் குடுவையை
சேலை முந்தானையில் வாங்கி
தன் சுவாசம் முழுதும் சேர்த்து ஊதி ஊதி
தன் பிள்ளைக்கு அதை புகட்டுகிறாள்.
அன்றொருநாள் குழம்பை ருசி பார்க்க
என் கையில் ஊற்றியபோது சுட்டுவிட
பதறிய தோழியின் செய்கைக்கு
ஒப்பாக இக்காட்சி இருந்தது.
அம்மாவாகிட நினைப்பதெல்லாம்
அத்தனை சுலபமில்லை என்பொருட்டு
அவள் அன்று ஆகியிருந்தாள்.
கெளரவக் காரணம்.
சிறு வயதிலிருந்தே
மாமா வீடு என்றாலே பயம்
காத்துக் கருப்பு அண்டாதிருக்க
பயங்கர உருவம் கொண்ட பூச்சாண்டி படத்தை
வாசலில் பொருத்தியிருப்பார்கள்.
காலம் மாறிவிட்ட பிறகும்,
அந்த பூச்சாண்டி படம் அகற்றப்படவில்லை
இப்போது என் மகளும் அதைப்பார்த்துப் பயப்படுகிறாள்
அவளின் பொருட்டு
பின்பக்க வாசல் வழியாகச் செல்ல
இப்போது தான்
கெளரவமான காரணம் கிடைத்தது எனக்கு.
ஏதுமாறியாக் குடிசை
புயல் எச்சரிக்கைத் தொடர்ந்து
கரையோர மக்கள் வெளியேறும்படி
வந்த உத்தரவுக்கு பணிந்து
“திரும்பி வருவோம்” என்ற நம்பிக்கையில்
வீட்டை பூட்டிவிட்டு மனிதர்கள் ஊருக்குள் நகர
புயலுக்கு தன்னைத் தாரை வார்த்து செல்வதை அறியாத குடிசைகள்
“போனவர்கள் திரும்புவார்கள்” என
வழக்கம்போல் காத்திருக்கத் தொடங்கியது.
அம்மாவின் ஆன்ட்ராய்டு வாழ்வு.
வேண்டாமென
இத்தனைக் காலம் மறுத்து
ஒருவழியாக அம்பந்தைந்து வயதில்
அம்மா ஆன்ட்ராய்டு மொபைலைத் தொடுகிறாள்
டைப் பண்ணத் தெரியவில்லை எனப் புலம்புகிறாள்
வாய்ஸ்மெசஜ் சொல்லித்தருகிறேன்
உறவினர்கள் அனுப்பும் அத்தனை பார்வர்டு செய்திகளையும்
உண்மையென நம்பி எனக்கு அனுப்பி வைத்துவிட்டு வருத்தப்படுகிறாள்
வேலையின் பொருட்டு
விடுபட்ட சீரியல்களை
யூடியுப்பில் கண்டு மகிழ்ந்ததாய் குதூகலிக்கிறாள்
எனது அழைப்பு வரவில்லையே என
ஏங்கித் தவித்த அவளின் நாட்கள் மாறிவிட்டன
தன் கைக்குள் நான் இருப்பதாகவே இப்போது
அம்மா உணர்கிறாள்
களைப்பு மிகுதியில் என்றேனும்
நான் சொல்லாமல் தூங்கிவிட்டதை
வாட்சப் லாட்ஸ் சீன் சொல்லிவிடுகிறது அம்மாவிடம்…!
ராசிபலன் காலண்டர்.
ஒவ்வொரு விடியலிலும் ராசிபலன் பார்த்து
தன் நாட்களைத்
தொடங்குகிறாள் மகளவள்
வரவு எனப் படித்த நாளில் புத்துணர்ச்சி கொள்கிறாள்
விரயம் எனக் காண்கையில் தளர்கிறாள்
இவையெல்லாம் மூடநம்பிக்கை எனச் சொல்லித் தேற்றுகிறேன்
நம்பிக்கையின்றி நகர்கிறாள்
தோல்வி எழுதப்படாத
ராசிபலன் காலண்டர் தேடி
மகளின் பொருட்டு
அலைகிறேன் கடைகளில்..!